மனைவி கிருத்திகாவுக்கு ஜாமீன் பப்ஜி மதனின் ஜாமீன் மனு தள்ளுபடி - சைதாப்பேட்டை கோர்ட்டு உத்தரவு
யூ-டியூப் சேனலில் ஆபாசப் பேச்சுகள் பேசிய வழக்கில் பப்ஜி மதனின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்து சைதாப்பேட்டை கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
ஆலந்தூர்,
ஆன்லைன் விளையாட்டுகளில் டிப்ஸ் தருவதாக கூறி சிறுவர், சிறுவர்களிடம் யூ-டியூப்களில் ஆபாசப் பேச்சுகள் பேசியதாக பப்ஜி மதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழகம் முழுவதும் போலீசாருக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து பப்ஜி மதனை தேடி வந்தனர். இந்த நிலையில், மதனின் 2 யூ-டியூப் சேனல்களை கவனித்து வந்ததாக அவரது மனைவி கிருத்திகாவை கடந்த 16-ந்தேதி மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
கிருத்திக்காவை கைது சிறையில் அடைத்த போது, அவரது 8 மாத குழந்தையும் அவருடன் சிறையில் இருந்தது. பின்னர் தலைமறைவாக இருந்த பப்ஜி மதனையும் போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் ஜாமீன் வழங்க கோரி சைதாப்பேட்டை பெருநகர 11-வது நீதிமன்றத்தில் பப்ஜி மதனும் அவரது மனைவி கிருத்திகா ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர். ஜாமீன் மனு மீதான விசாரணை நீதிபதி பரமசிவம் முன் வந்தது.
அப்போது அரசு தரப்பு வக்கீல் விமலா 2 பேரையும் ஜாமீனில் விடுவிக்க எதிர்ப்பு தெரிவித்தார். இந்த மனு மீதான விசாரணைக்கு பின்னர், நீதிபதி பரமசிவம் தீர்ப்பு வழங்கினார். அதில் குழந்தையுடன் சிறையில் உள்ள கிருத்திகாவுக்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
அவர் மறு உத்தரவு வரும் வரை தினமும் காலை 10.30 மணிக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று திர்ப்பில் கூறப்பட்டுள்ளது. பப்ஜி மதனின் ஜாமீன் மனுவை நீதிபதி பரமசிவம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.