திம்பம் மலைப்பாதையில் லாரி பழுதாகி நின்றது; 5 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

திம்பம் மலைப்பாதையில் லாரி பழுதாகி நின்றதால் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2021-06-29 23:50 GMT
தாளவாடி
திம்பம் மலைப்பாதையில் லாரி பழுதாகி நின்றதால் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
திம்பம் மலைப்பாதை
ஈரோடு மாவட்டம் தாளவாடியை அடுத்து திம்பம் மலைப்பாதை உள்ளது. இந்த மலைப்பாதையில் மொத்தம் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இந்த மலைப்பாதை வழியாக திண்டுக்கல்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. மேலும் தமிழகம்-கர்நாடக இடையே முக்கிய போக்குவரத்தாகவும் திம்பம் மலைப்பாதை உள்ளது. இதனால் எப்போதும் வாகன போக்குவரத்து இங்கு இருந்துகொண்டே இருக்கும். தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளதால் அத்தியாவசிய பொருட்கள் ஏற்றி செல்லும் வாகனங்கள் மட்டும் சென்று வருகின்றன. 
லாரி பழுதானது
இந்த மலைப்பாதை வழியாக அதிக பாரம் ஏற்றிச்செல்லும் கனரக வாகனங்கள் அடிக்கடி ரோட்டில் பழுதாகி நிற்பதும், கொண்டை ஊசி வளைவுகளில் திரும்ப முடியாமல் சரிந்து விபத்துக்குள்ளாவதும் வாடிக்கையாகி விட்டது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிப்பும் ஏற்படுகிறது.  
இந்தநிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து கர்நாடக மாநிலம் மைசூருக்கு உப்பு பாரம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று திம்பம் மலைப்பாதை வழியாக சென்று கொண்டு இருந்தது. நேற்று காலை 6 மணி அளவில் மலைப்பாதையின் 21-வது கொண்டை ஊசி வளைவில் லாரி சென்று கொண்டிருந்தபோது திரும்ப முடியாமல் பழுதாகி சாலையில் அப்படியே நின்று விட்டது.
போக்குவரத்து பாதிப்பு
லாரியை தொடர்ந்து டிரைவரால் இயக்க முடியவில்லை. இதனால் மலைப்பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இரு சக்கர வாகனங்கள் மட்டும் சென்றன. மற்ற வாகனங்கள் செல்ல முடியவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். அதன் பின்னர் சத்தியமங்கலத்தில் இருந்து மெக்கானிக் வரவழைக்கப்பட்டு லாரியில் ஏற்பட்ட பழுது காலை 11 மணி அளவில் சரி செய்யப்பட்டது. அதன் பிறகு போக்குவரத்து சீரானது.  
திம்பம் மலைப்பாதையில் லாரி பழுதாகி நின்றதால் தமிழகம்-கர்நாடகம் இடையே 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்