தீவட்டிப்பட்டி அருகே இறைச்சி கடை உரிமையாளர் கொலையில் 4 பேர் கைது திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண்

தீவட்டிப்பட்டி அருகே இறைச்சி கடை உரிமையாளர் கொலையில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். திருச்சி கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார்.

Update: 2021-06-29 21:55 GMT
ஓமலூர்,
கொலை
சேலம் கிச்சிப்பாளையம் சன்னியாசிகுண்டு ரோடு பகுதியை சேர்ந்த இறைச்சிக்கடை உரிமையாளர் பாதுஷா மொய்தீன் (வயது 30). இவரும், இவருடைய நண்பர் திலீப். இவர்கள் இருவரும் தர்மபுரி மாவட்டத்துக்கு மது வாங்க சென்றதாகவும், மது வாங்கி விட்டு வந்த போது மர்நபர்கள் பாதுஷா மொய்தீனை வெட்டி கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பாதுஷா மொய்தீன் நண்பர் திலீப்பிடம் விசாரணை நடத்தி வந்தனர்.
4 பேர் கைது
இதற்கிடையே இந்த கொலை தொடர்பாக சேலம் கிச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சக்தி (எ) சக்தி பிரபு (31), சேலம் சிவதாபுரம் பனங்காடு பிள்ளையார் கோவில் பகுதியைச் சேர்ந்த மணி (எ) மணிகண்டன் (26), சிவதாபுரம் ஆண்டிபட்டி பனங்காடு பகுதியைச் சேர்ந்த வசந்தகுமார் (21), சேலம் சிவதாபுரம் ஆண்டிப்பட்டி பிள்ளையார் கோவில் தெரு பகுதியை சேர்ந்த சுரேஷ் (22) ஆகிய 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய கார்த்திக் என்பவர் திருச்சி கோர்ட்டில் நேற்று சரணடைந்தார். பண்ணப்பட்டி பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
பரபரப்பு தகவல்கள்
கொலை தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் வெளியான தகவல்கள் விவரம் வருமாறு:-
கொலை செய்யப்பட்ட பாதுஷா மொய்தீனும், தலைமறைவான மணிகண்டனும் வெவ்வேறு வழக்குகளில் சிக்கி சிறையில் இருந்துள்ளனர். அங்கு மணிகண்டனுக்கும், அதே ஜெயிலில் இருந்த மணி என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் மணிக்கு ஆதரவாக பாதுஷா மொய்தீன் இருந்ததாக தெரிகிறது. இந்த பிரச்சினைக்கு பிறகு மணிகண்டன் கோவை ஜெயிலுக்கு மாற்றப்பட்டார்.
கொலை செய்ய திட்டம்
அதன்பிறகு ஜெயிலில் இருந்து வெளியே வந்த மணிகண்டன், பாதுஷா மொய்தீனை கொலை செய்ய திட்டம் போட்டார். அதற்காக அவருடைய கூட்டாளிகளுடன் பாதுஷா மொய்தீனை நோட்டமிட்டு வந்தனர். அன்று மது வாங்கி விட்டு மோட்டார் சைக்கிளில் வந்த பாதுஷா மைதீனை, மணிகண்டன் தரப்பினர் தீர்த்துக் கட்டியதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக மேல் விசாரணை நடந்து வருகிறது. கைதானவர்களிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி, கொடுவாள், மோட்டார் சைக்கிள் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் செய்திகள்