75 நாட்களுக்கு பிறகு காரைக்கால் விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு செல்கின்றனர்
மீன்பிடி தடைக்காலம், டீசல் மானியம் கோரிக்கை காரணமாக 75 நாட்களுக்கு பிறகு காரைக்கால் விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு செல்ல தயாராகி வருகின்றனர்.
காரைக்கால்,
மீன்பிடி தடைக்காலம், டீசல் மானியம் கோரிக்கை காரணமாக 75 நாட்களுக்கு பிறகு காரைக்கால் விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு செல்ல தயாராகி வருகின்றனர்.
மீன்பிடி தடைக்காலம்
கடலில் மீன்களின் இனப்பெருக்கத்துக்காக ஆண்டுதோறும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை மொத்தம் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமலில் இருக்கும். இந்த நாட்களில் விசைப்படகு மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க செல்லமாட்டார்கள். சாதாரண பைபர் படகுகளில் மட்டும் மீனவர்கள் கடலுக்குள் குறைந்த தூரம் சென்று சிறிய அளவிலான மீன்களை பிடித்து வருவார்கள்.
இந்த நிலையில், மீன்பிடி தடைக்காலம் கடந்த 14-ந் தேதியுடன் முடிவடைந்த நிலையில், மறுநாள் முதல் புதுச்சேரி, தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
75 நாட்களுக்கு பிறகு
ஆனால் டீசல் விலையை மத்திய அரசு குறைக்கவேண்டும். அல்லது டீசலுக்கான மானியத்தை புதுச்சேரி அரசு உயர்த்தி வழங்கவேண்டும். மீன்பிடி தடைக்கால நிவாரணத்தை அனைத்து மீனவர்களுக்கும் வழங்கவேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 30-ந் தேதி வரை (அதாவது இன்று வரை) மீன்பிடிக்க செல்ல மாட்டோம் என்று காரைக்கால் மாவட்ட 11 கிராம மீனவர்கள் அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில் 75 நாட்களுக்கு பிறகு இன்று மாலை முதல் விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள் செல்ல தயாராகி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, மீனவர்கள் தங்கள் படகில் ஐஸ் கட்டிகள், மீன்பிடி வலை, சமையலுக்கு தேவையான பொருட்கள் போன்றவற்றை ஏற்றி வருகின்றனர். நீண்ட நாட்களுக்கு பிறகு விசைப்படகுகள் கடலுக்கு செல்ல இருப்பதால் காரைக்கால் துறைமுகம் வழக்கம்போல் பரபரப்பாக காணப்பட்டது.