சிந்தாமணியில் இருந்து டெல்லிக்கு 250 டன் மாம்பழங்களுடன் கிசான் ரெயில் புறப்பட்டது - எடியூரப்பா தொடங்கி வைத்தார்

சிந்தாமணியில் இருந்து டெல்லிக்கு 250 டன் மாம்பழங்களுடன் கிசான் ரெயில் புறப்பட்டு சென்றது. இந்த ரெயிலை முதல்-மந்திரி எடியூரப்பா தொடங்கி வைத்தார்.

Update: 2021-06-29 21:05 GMT
பெங்களூரு:

காய்கறிகள்

  சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணியில் இருந்து டெல்லிக்கு 250 டன் மாம்பழங்களை கொண்டு செல்லும் கிசான் ரெயில் போக்குவரத்து தொடக்க விழா நேற்று பெங்களூருவில் உள்ள எலகங்கா ரெயில் நிலையத்தில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி எடியூரப்பா கலந்து கொண்டு, பச்சை கொடியை காட்டி கிசான் ரெயில் இயக்கத்தை தொடங்கி வைத்தார். இதில் எடியூரப்பா பேசியதாவது:-

  விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும் நோக்கத்தில் இந்த கிசான் ரெயில் மிக முக்கிய பங்காற்றுகிறது. இதனால் மாம்பழங்களை சாகுபடி செய்யும் விவசாயிகள் பயன் பெறுகிறார்கள். மத்திய அரசால் ஆபரேஷன் பசுமை திட்டம் மூலம் இந்த கிசான் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. விவசாயிகள் சாகுபடி செய்யும் பழங்கள், காய்கறிகள் இந்த ரெயிலில் 50 சதவீத கட்டணத்தில் எடுத்து செல்லப்படுகிறது.

விவசாயிகள் வருமானம்

  இந்த கிசான் ரெயில் கடந்த 2020-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதனால் விவசாயிகளின் பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கிறது. பிரதமர் மோடி விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் காய்கறிகள், பழங்கள், பூ, தேங்காய் போன்ற பொருட்களை கொண்டு செல்ல இந்த கிசான் ரெயில் உதவுகிறது. விவசாயிகளின் விளைப்பொருட்களுக்கு அதிக விலை கிடைக்க வேண்டும் என்பது பிரதமரின் விருப்பம் ஆகும்.

  அதனால் கர்நாடக விவசாயிகள் இந்த கிசான் ரெயில் வசதியை பயன்படுத்தி தங்களின் விளைப்பொருட்களுக்கு நல்ல விலையை பெற முயற்சி செய்ய வேண்டும். கோலார், சிக்பள்ளாப்பூர் மாவட்டங்களில் இருந்து 5 கிசான் ரெயில்கள் டெல்லி செல்கின்றன. இதுவரை 1,250 டன் மாம்பழங்கள் டெல்லிக்கு கிசான் ரெயில்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

பிரதமரின் விருப்பம்

  டெல்லிக்கு கொண்டு செல்வதால் விவசாயிகளுக்கு மாம்பழங்கள் கிலோவுக்கு கூடுதலாக ரூ.10 கிடைக்கிறது. விவசாயிகளின் வருமானத்தை 2 மடங்கு உயர்த்த வேண்டும் என்ற பிரதமரின் விருப்பத்தை இந்த கிசான் ரெயில் திட்டம் பூர்த்தி செய்வதாக உள்ளது. அதனால் விவசாயிகள் இந்த கிசான் ரெயில் வசதியை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
  இவ்வாறு எடியூரப்பா பேசினார்.

  இந்த விழாவில் போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை, வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக், தோட்டக்கலைத்துறை மந்திரி சங்கர், கூட்டுறவுத்துறை மந்திரி எஸ்.டி.சோமசேகர், பெங்களூரு வளர்ச்சி ஆணைய தலைவர் எஸ்.ஆர்.விஸ்வநாத் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்