ரேகா கதிரேசை கொலை செய்ய சிறையில் சதி திட்டம்

பெங்களூரு மாநகராட்சி முன்னாள் பெண் கவுன்சிலர் ரேகா கதிரேசை கொலை செய்ய சிறையில் சதி திட்டம் தீட்டப்பட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.;

Update: 2021-06-29 20:59 GMT
பெங்களூரு:

குத்திக்கொலை

  பெங்களூரு மாநகராட்சிக்கு உட்பட்ட செலுவாதிபாளையா வார்டு முன்னாள் கவுன்சிலராக இருந்தவர் ரேகா கதிரேஷ். பா.ஜனதா கட்சியை சேர்ந்த இவர் கடந்த 24-ந் தேதி காட்டன்பேட்டை அருகே பிளவர் கார்டன் பகுதியில் உள்ள தனது அலுவலகம் முன்பு கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து காட்டன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் கொலையாளிகளை கைது செய்ய 6 தனிப்படையும் அமைக்கப்பட்டு இருந்தது.

  ரேகா கதிரேஷ் கொலை தொடர்பாக பீட்டர், அவரது கூட்டாளிகளான சூர்யா, ஸ்டீபன், அஜய், புருஷோத்தம், ரேகாவின் கணவர் கதிரேசின் சகோதரி மாலா, அவரது மகன் அருள் ஆகியோரை போலீசார் கைது செய்து உள்ளனர். இதில் பீட்டர், சூர்யாவை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்து இருந்தனர். மாலா, அருளை தங்களது காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறையில் இருந்து வெளியே எடுக்க...

  இந்த நிலையில் ரேகாவை கொலை செய்ய சிறையில் வைத்து சதி திட்டம் தீட்டியதாக தற்போது பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது கொலையான ரேகா, கதிரேசின் 2-வது மனைவி என்று கூறப்படுகிறது. செலுவாதிபாளையா வார்டில் இருந்து 2010 மற்றும் 2015-ம் ஆண்டு ரேகா கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டார். இந்த முறையும் செலுவாதிபாளையா வார்டில் போட்டியிட அவர் திட்டமிட்டு இருந்தார்.

  ஆனால் அந்த வார்டில் மாலா தனது மகள் அல்லது மருமகளை போட்டியிட வைக்க நினைத்து இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக ரேகாவுக்கும், மாலாவுக்கும் இடையே தகராறு இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் மாலாவின் மகன் அருளை கஞ்சா வழக்கில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து இருந்ததாகவும், சிறையில் இருந்து அருளை வெளியே எடுக்க மாலா, ரேகாவின் உதவியை நாடியதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அருளை சிறையில் இருந்து வெளியே எடுக்க மாலா உதவி செய்யவில்லை என்று தெரிகிறது.

சதி திட்டம்

  இதுபற்றி அறிந்த அருள் சிறையில் இருந்தபடியே ரேகாவை கொலை செய்ய சதிதிட்டம் தீட்டியதாகவும், இதற்காக அவர் சில ரவுடிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதே நேரம் ஜாமீனில் வந்த அருள், பீட்டருக்கு, ரேகாவுக்கும் இடையே பணப்பிரச்சினையை பயன்படுத்தி கொண்டு ரேகாவை கொலை செய்ய பீட்டரை தூண்டிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் ரேகாவை கொலை செய்ய பீட்டருக்கும், அவரது கூட்டாளிகளுக்கும் பணம் கொடுக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

  ரேகாவின் கணவர் கதிரேஷ் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்டு இருந்தார். அப்போது அவரது சமாதியில் உங்களை கொலை செய்தவர்களை பழிவாங்குவேன் என்று பீட்டர் சபதம் செய்ததாகவும், அப்போது பீட்டரை ரேகா கிண்டல் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ரேகா மீது பீட்டர் கோபத்தில் இருந்து வந்ததாகவும், மேலும் ஒப்பந்த தொகையை ஒதுக்காத ஆத்திரத்திலும் ரேகாவை, பீட்டர் கொலை செய்தததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகள்