குவைத் நாட்டிற்கு வேலைக்கு சென்ற ஏர்வாடி பெண்ணின் கதி என்ன?- குடும்பத்தினர் கலக்கம்

குவைத் நாட்டிற்கு வேலைக்கு சென்ற ஏர்வாடி பெண்ணின் கதி என்னவென்று தெரியாமல் குடும்பத்தினர் கலக்கம் அடைந்துள்ளனர்.

Update: 2021-06-29 20:31 GMT
ஏர்வாடி:
குவைத் நாட்டிற்கு வேலைக்கு சென்ற ஏர்வாடி பெண்ணின் கதி என்னவென்று தெரியாததால் குடும்பத்தினர் கலக்கத்தில் உள்ளனர்.

குவைத் நாட்டில் வேலை

நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள திருவரங்கநேரியைச் சேர்ந்தவர் மணி. கூலித்தொழிலாளியான இவருடைய மனைவி விமலா (வயது 40). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். மணிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவரால் வேலைக்கு செல்ல முடியவில்லை. இதனால் குடும்பத்தில் வறுமை நிலவியது.
இதையடுத்து விமலா கூலி வேலைக்கு சென்று வந்தார். ஆனால் அந்த வருமானம் குடும்பத்திற்கு போதுமானதாக இல்லை. இதனால் விமலா ஏர்வாடியை சேர்ந்த ஒருவர் மூலம் கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் குவைத் நாட்டில் வீட்டு வேலைக்கு சென்றார். அங்கு இருந்து வாரம் ஒரு முறை செல்போனில் தனது குடும்பத்தினருடன் பேசி வந்தார். ஆனால் 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் விமலாவுக்கு சம்பளம், சாப்பாடு கொடுக்கவில்லை என்றும், ெகாடுமைப்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து விமலா அங்குள்ள இந்திய தூதரகத்தில் புகார் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அவரை ஊருக்கு வந்துவிடுமாறு குடும்பத்தினர் அழைத்தனர். 

கதி என்ன?

இதற்கிடையே கடந்த மார்ச் மாதம் முதல் விமலாவிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை. பின்னர் மணி தனது மனைவியை மீட்டு தருமாறு மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு உள்பட அதிகாரிகளிடம் மனு கொடுத்தார். இதுபற்றி வெளியுறவு அமைச்சகத்திற்கும் ஆன்லைனில் புகார் மனுவும் அனுப்பினார். 
இந்த நிலையில் விமலா இறந்து விட்டதாக குவைத்தில் இருந்து குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் விமலா குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் அவர் எப்படி இறந்தார், அதற்கான சான்றுகளும் வரவில்லை. இதனால் அவர் உயிருடன் இருக்கிறாரா, இறந்துவிட்டாரா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதனால் அவரது கதி என்னவென்று தெரியாததால் குடும்பத்தினர் கலக்கத்தில் உள்ளனர். 

உடல் நலக்குறைவு

இதுகுறித்து விமலாவின் மகன் ரஞ்சித் குமார் கூறுகையில், எனது தாயார் இந்திய தூதரகத்திடம் புகார் செய்ய சென்ற போது, உடல் நல குறைவு ஏற்பட்டதாகவும், இதனால் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாகவும் அவருடன் சென்றவர் தகவல் கூறினார். ஆனால் அதன் பின் தகவல் ஏதும் கிடைக்கவில்லை. அவருடன் சென்றவர்கள் ஊருக்கு திரும்பி விட்டனர். ஆனால் எனது தாயார் விமலா மட்டும் வரவில்லை” என்றார். 

மேலும் செய்திகள்