நெல்லையில் தடையில்லா மின்சாரம் வழங்க அதிகாரிகள் நேரடி களஆய்வு

நெல்லையில் தடையில்லா மின்சாரம் வழங்க அதிகாரிகள் நேரடியாக களஆய்வு மேற்கொண்டனர்.

Update: 2021-06-29 20:18 GMT
நெல்லை:
நெல்லை மண்டலத்தில் மின் பாதையில் சிறப்பு பராமரிப்பு பணி முடிவடைந்தது. இதையடுத்து தடையில்லா மின்சாரம் வழங்க அதிகாரிகள் நேரடி களஆய்வு மேற்கொண்டனர்.

அதிகாரிகள் ஆய்வு

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நெல்லை மண்டலத்துக்கு உட்பட்ட நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் மின் பாதைகளில் மெகா சிறப்பு பராமரிப்பு பணி கடந்த 19-ந் தேதி தொடங்கி 28-ந் தேதி வரை 10 நாட்கள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது.
இந்த பணிகளை நெல்லை மண்டல மின் வாரிய தலைமை பொறியாளர் செல்வகுமார், மேற்பார்வை பொறியாளர் செல்வராஜ் மற்றும் அதிகாரிகள் நேரடியாக களஆய்வு மேற்கொண்டனர்.

பணி முடிந்தது

இதுகுறித்து தலைமை பொறியாளர் செல்வகுமார் கூறியதாவது:-
தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவின்பேரில் மின் பாதைகளில் சிறப்பு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. கடந்த சட்டமன்ற தேர்தல் மற்றும் கொரோனா ஊரடங்கு காலத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள முடியவில்லை. தற்போது ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டதால், மின்வாரிய ஊழியர்கள் கூட்டாக சேர்ந்து தீவிர பராமரிப்பு பணிகளை மேற்கொண்டனர்.
நெல்லை மண்டலத்தில் உள்ள 157 உப மின் நிலையங்களின் கீழ் சிறப்பு பராமரிப்பு பணியின்போது 624 உடைந்த மின்கம்பங்கள் மாற்றப்பட்டன. 1,252 சாய்ந்த மின்கம்பங்கள் நிமிர்த்தி சரி செய்யப்பட்டது. மேலும் வலுவிழந்த ஜம்பர்கள் மாற்றப்பட்டு, தாழ்வாக இருந்த மின் கம்பிகள் இழுத்து கட்டப்பட்டன. மேலும் 36,466 இடங்களில் மின் பாதையையொட்டி வளர்ந்திருந்த மரக்கிளைகள் வெட்டி அகற்றப்பட்டன.

தடையில்லா மின்சாரம்

இந்த பணியின் மூலம் இனிமேல் தடையில்லா மின்சாரம் வினியோகம் செய்யப்படும். ஏதேனும் இடர்பாடு மற்றும் அவசர தேவை ஏற்பட்டால் மட்டும் மின் வினியோகம் பாதிப்பு ஏற்படும். அதுவும் உடனுக்குடன் சரி செய்யப்பட்டு பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
மின்சாரம் தொடர்பான புகர்களை பொதுமக்கள் 1912 என்ற கட்டணமில்லா தொலைபேசி மூலமாகவும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டுள்ள ‘‘மின்னகம்’’ என்ற திட்டத்தில் 9498794987 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம். இந்த எண்ணில் பதிவு செய்யப்படும் தகவல்கள் உடனடியாக மாநிலத்தில் எந்த மூலையில் இருந்தாலும் சம்பந்தப்பட்ட என்ஜினீயருக்கு தெரிவிக்கப்பட்டு, குறைகள் சரிசெய்யப்படும். எனவே, பொதுமக்கள் இந்த எண்களை பயன்படுத்தி மின் குறைகளை சரி செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்