பிறப்பு இறப்பு சான்றிதழ்கள் வழங்க சிறப்பு முகாம்

மதுரை மாநகராட்சியில் பிறப்பு இறப்பு சான்றிதழ்கள் வழங்க சிறப்பு முகாம் இன்று முதல் 3 நாட்களுக்கு நடக்கிறது.

Update: 2021-06-29 19:57 GMT
மதுரை,ஜூன்
மதுரை மாநகராட்சியில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் வழங்க சிறப்பு முகாம் இன்று முதல் 3 நாட்களுக்கு நடக்கிறது.
4 மண்டலங்கள்
மதுரை மாநகராட்சி கமிஷனர் டாக்டர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கொரோனா நோய் தொற்று மற்றும் பொது முடக்கம் காரணமாக பொதுமக்கள் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் பெற முடியாமல் உள்ளனர். இதற்கு விண்ணப்பம் வழங்காமலும் உள்ளனர். எனவே சான்றிதழ்கள் பெற இயலாத பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரியில் நிகழ்ந்த பிறப்பு-இறப்பு தவிர, மற்ற இடங்களில் 2018-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை நிகழ்ந்த பிறப்பு-இறப்பு சான்றிதழ்களை தாமத கட்டணமின்றி வழங்க சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இந்த முகாம் 30-ந் தேதி (இன்று) முதல் 2-ந் தேதி வரை 3 நாட்களுக்கு காலை 10 மணி முதல் 2 மணி வரை நடைபெறும்.
இந்த சிறப்பு முகாம்கள் 4 மண்டலங்களிலும் நடக்கிறது. அதன்படி மண்டலம்-1ல் 1 முதல் 23 வார்டுகளுக்கு வெள்ளி வீதியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இந்த சிறப்பு முகாம் நடக்கும். மண்டலம்-2ல் வார்டு 24 முதல் 49 வரை கே.கே.நகர் வக்பு வாரிய கல்லூரியிலும், மண்டலம்-3ல் வார்டு 50 முதல் 74 வரை காமராஜர் சாலையில் உள்ள சவுராஸ்டிரா ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், மண்டலம்-4ல் வார்டு 75 முதல் 100 வரை பழங்காநத்தம் பஸ் நிலையம் அருகில் உள்ள மாநகராட்சி கல்யாண மண்டபத்திலும் சிறப்பு முகாம் நடைபெறும்.
ஆதார் பதிவு
பிறப்பு சான்றிதழ்களில் பெயர் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இருப்பவர்கள் மற்றும் பாஸ்போர்ட் உள்ளிட்ட தேவைகளுக்காக கையெழுத்துடன் கூடிய சான்றிதழ்கள் தேவைப்படுபவர்கள் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம். அதே முகாமில் குழந்தைகளுக்கான ஆதார் பதிவும் செய்யப்படும். மேலும் மாநகராட்சி பள்ளிகளில் சேர விரும்பும் குழந்தைகளுக்கு அங்கேயே சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்கள் வழங்கப்படும். இந்த முகாமில் கலந்து கொள்பவர்கள் அரசின் கொரோனா விதிகளை முறையாக கடைபிடிக்க வேண்டும். முகக்கவசம் அணிந்து வர வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்