சிறப்பு தரிசன கட்டணம் மூலம் ரூ.30¾ கோடி வருமானம்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 3 ஆண்டுகளில் சிறப்பு தரிசன கட்டணம் மூலம் ரூ.30 கோடியே 77 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது.
மதுரை, ஜூன்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 3 ஆண்டுகளில் சிறப்பு தரிசன கட்டணம் மூலம் ரூ.30 கோடியே 77 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது.
மீனாட்சி அம்மன் கோவில்
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உலக புகழ் பெற்றது. இந்த கோவிலில் எழுந்தருளியுள்ள மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் சுவாமியை தரிசனம் செய்வதற்கும், கோவிலில் அமைந்துள்ள கோபுரம், மண்டபம், சிலைகளை காணவும் உள்ளூர் மட்டுமில்லாமல் வெளியூர், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இவ்வாறு கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் மூலம் பெறப்படும் தரிசன கட்டணம், செல்போன் பாதுகாப்பு கட்டணம் மூலம் கோவிலுக்கு ஆண்டு தோறும் கோடிக்கணக்கில் வருமானம் வருகிறது. இதுகுறித்து மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் மூலம் கோவில் நிர்வாகத்திற்கு கேள்வி எழுப்பினார். அவருக்கு கோவில் நிர்வாகம் பதில் அளித்துள்ளது.
சிறப்பு தரிசன கட்டணம்
அதில், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை சிறப்பு தரிசன கட்டணம், செல்போன் பாதுகாப்பு கட்டணம் மூலம் நிர்வாகம் ஈட்டிய வருமானம் மற்றும் கோவிலுக்கு வந்த பக்தர்கள் எண்ணிக்கை குறித்த தகவல்கள் இடம் பெற்றுள்ளது.
மீனாட்சி அம்மன் கோவில் 2018 முதல் 2020-ம் ஆண்டு வரை 40 லட்சத்து 86 ஆயிரத்து 507 பேர் தரிசனம் செய்துள்ளனர். மேலும் மீனாட்சி அம்மனையும், சுவாமியையும் சிறப்பு தரிசனம் செய்வதற்கு 100 ரூபாய் கட்டணம் எனவும், ஒரு சுவாமியை மட்டும் தரிசனம் செய்ய 50 ரூபாய் என தனித்தனியாக கட்டணம் நிர்ணயிக்கபபட்டுள்ளது. இதன் மூலம் கடந்த 3 ஆண்டுகளில் 30 கோடியே 76 லட்சத்து 81 ஆயிரத்து 800 ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்போன் பாதுகாப்பு மையம்
இதுதவிர கோவில் நிர்வாகம் சார்பில் 5 கோபுர வாசல்களிலும் செல்போன் பாதுகாப்பு மையம் அமைக்கப்பட்டன.
அதில் கோவிலுக்கு வரும் பக்தர்களின் செல்போன்கள் தலா ஒன்றுக்கு 10 ரூபாய் கட்டணம் பெறப்பட்டு இங்கு பாதுகாக்கப்படுகின்றன. இதன் மூலம் கடந்த 3 ஆண்டுகளில் 4 கோடியே 55 லட்சத்து 67 ஆயிரத்து 635 ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக ெதரிவிக்கப்பட்டுள்ளது.