குடிநீர் வினியோக இடைவெளி நாட்களை குறைக்க நடவடிக்கை
விருதுநகரில் குடிநீர் வினியோக இடைவெளி நாட்களை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இளைஞர் காங்கிரசார் வலியுறுத்தி உள்ளனர்.
விருதுநகர்,
விருதுநகரில் குடிநீர் வினியோக இடைவெளி நாட்களை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இளைஞர் காங்கிரசார் வலியுறுத்தி உள்ளனர்.
குடிநீர் பிரச்சினை
இதுகுறித்து கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் மீனாட்சிசுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
விருதுநகர் நகராட்சி பகுதியில் மாதம் 3 முறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படும் நிலை உள்ளது. தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் பயன்பாட்டிற்கு வந்த பின்னரும் இதே நிலைதான் நீடிக்கிறது. இதற்கு காரணம் குடிநீர் வினியோக திட்டம் மேம்படுத்தப்படாதது தான் என கூறப்படுகிறது.
நகரில் குடிநீர் வினியோக மேம்பாட்டிற்காக 10 லட்சம் லிட்டர் கொள்ளளவுள்ள இருமேல்நிலை குடிநீர் தொட்டி கட்டி முடிக்கப்பட்டும் அவை முழுமையான பயன்பாட்டிற்கு வராத நிலை உள்ளதாக கூறப்படுகிறது.
தட்டுப்பாடு
இந்தநிலையில் விருதுநகர் தொகுதி எம்.பி. மாணிக்கம் தாகூர் அலுவலகம் உள்ள லட்சுமி காலனி பகுதியில் 15 நாட்களாகியும் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என அப்பகுதி மக்கள் புகார் கூறும்நிலை உள்ளது.
இதே நிலை நகரின் பல பகுதிகளிலும் நிலவுவதாக கூறப்படுகிறது. மாவட்ட தலைநகரில் இந்நிலை நீடிப்பது என்பது வேதனை தரும் விஷயம் ஆகும். நிலத்தடி நீர் ஆதாரங்களும் முழுமையாக பயன்படுத்தப்படவில்லை. மேலும் நகரில் தொகுதி எம்.பி. அலுவலகம் உள்ள பகுதியில் குடிநீர் வினியோகம் முறையாக இல்லாததால் எம்.பி. அலுவலகத்திற்கு வந்து செல்வோர் சிரமப்படும் நிலை உள்ளது.
அறிவுறுத்தல்
அப்பகுதி மக்கள் குடிநீர் தட்டுப்பாட்டால் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே விருதுநகர் நகராட்சி நிர்வாகம் நகரில் குடிநீர்வினியோக இடைவெளி நாட்களை குறைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மாவட்ட நிர்வாகம் விருதுநகரில் குடிநீர் வினியோக நிலை குறித்து ஆய்வு செய்து நகரில் குடிநீர் வினியோகத்தை மேம்படுத்த உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.