முன்விரோதம் காரணமாக 4 ஆடுகளை கொன்று கல்குவாரியில் வீச்சு
கிருஷ்ணராயபுரம் அருகே முன்விரோதம் காரணமாக 4 ஆடுகளை கொன்று கல்குவாரியில் வீசியதாக ஒருவர் கைது செய்ப்பட்டார்.;
கிருஷ்ணராயபுரம்
கல்குவாரியில் ஆடுகள்
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரத்தை அடுத்த கீழடை மாணிக்கபுரத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 45). விவசாயி. இவர், சம்பவத்தன்று தனக்கு சொந்தமான 15-க்கும் மேற்பட்ட ஆடுகளை அப்பகுதியில் உள்ள கல்குவாரி அருகே மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். பின்னர், மாலை மேய்ச்சலுக்கு விடப்பட்ட ஆடுகளை அழைத்து வருவதற்காக சுப்பிரமணி சென்றார். அப்போது 4 ஆடுகள் காணாமல் போனது தெரிய வந்தது. பின்னர் சுப்பிரமணியுடன் அவரது மனைவியும்சேர்ந்து ஆடுகளை தேடினார்.
அப்போது கல்குவாரி குட்டை தண்ணீரில் 4 ஆடுகளும் பரிதாபமாக செத்துக் கிடந்தன. இதனைக் கண்டு இருவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
ஒருவர் கைது
அப்போது கல்குவாரி அருகே அதே பகுதியை சேர்ந்த பெருமாள் (52) சுற்றி திரிந்து கொண்டிருந்தார். அவர் தான், தனது ஆடுகளை கொன்றிருக்க வேண்டும் என்று சந்தேகம் அடைந்த பெருமாள் இதுகுறித்து மாயனூர் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருத்திகா, பெருமாளை பிடித்து வந்து விசாரணை நடத்தினார். விசாரணையில், சுப்பிரமணியுடனான முன்விரோதம் காரணமாக ஆடுகளை கழுத்து நெரித்து கொன்று கல்குவாரியில் வீசியதை அவர் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து பெருமாள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.