பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கரூர்
பெட்ரோல் விலை லிட்டர் ரூ.100
கரூரில், பெட்ரோல் ரூ.97, ரூ.98 என்று விற்ற நிலையில் தற்போது ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ.100-ஐ தொட்டு விட்டது. டீசல் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்தநிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், பெட்ரோல் ரூ.50-க்கும், டீசல் ரூ.40-க்கும் விலை நிர்ணயம் செய்ய வேண்டும். தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசியை உடனடியாக வழங்க வேண்டும். செங்கல்பட்டில் உள்ள இந்துஸ்தான் பயோடெக் தடுப்பு மருந்துகள் உற்பத்தி வளாகத்தை தமிழக அரசிடம் வழங்க வேண்டும். மத்திய உணவு தொகுப்பில் இருந்து ஒருவருக்கு தலா 10 கிலோ உணவு தானியங்கள் விலையில்லாமல் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கரூர் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட நிர்வாக குழு நேதாஜி தலைமை தாங்கினார். இதில், இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் அகில இந்திய பார்வர்ட் பிளாக் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் இனாம் கரூர் நகர செயலாளர் சக்திவேல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட குழு தண்டபாணி, அகில இந்திய பார்வர்ட் பிளாக் மாவட்ட செயலாளர் சம்பத், விடுதலை சிறுத்தைகள் கட்சி அகரமுத்து, தனபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். முன்னதாக பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மாட்டு வண்டியில் இருசக்கர வாகனத்தை வைத்து ஊர்வலமாக வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குளித்தலை-அரவக்குறிச்சி குளித்தலை பஸ் நிலையம் எதிரே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜூ தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பள்ளப்பட்டியில், விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி கரூர் மாவட்ட செயலாளர் ஜெயராமன் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் கணேசன் முன்னிலை வகித்தார். இதில், இரு கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
தோகைமலை-வேலாயுதம்பாளையம்
தோகைமலை ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், பஸ் நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் தேவேந்திரன் தலைமை வகித்தார். இதில், கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் முனியப்பன், விடுதலைசிறுத்தைகள் கட்சியின் தோகைமலை மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வேலாயுதம்பாளையம் மலைவீதியில் ஒன்றிய செயலாளர் சண்முகம்தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக 15 பேர் மீது வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் வழக்குப்பதிவு செய்தார்.
நொய்யல்
கரூர் மேற்கு ஒன்றியம் வேலாயுதம்பாளையத்தில் இருந்து பரமத்தி வேலூர் செல்லும் சாலையில் கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் பெட்ரோல், டீசல் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் சண்முகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.