மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை தரமாக முடிக்க வேண்டும் கலெக்டர் திவ்யதர்சினி அறிவுறுத்தல்
தர்மபுரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை உரிய காலத்தில் தரமாக முடிக்க வேண்டும் என்று அதிகாரிகள் ஆய்வுக்கூட்டத்தில் கலெக்டர் திவ்யதர்சினி அறிவுறுத்தினார்.;
தர்மபுரி:
ஆய்வுக்கூட்டம்
தர்மபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய, மாநில அரசு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த மாதாந்திர ஆய்வு கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் திவ்யதர்சினி தலைமை தாங்கினார்.
கூடுதல் கலெக்டர் வைத்திநாதன் முன்னிலை வகித்தார்.
இந்த கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-
தர்மபுரி, அரூர், மொரப்பூர், கடத்தூர், பாப்பிரெட்டிப்பட்டி, நல்லம்பள்ளி, பென்னாகரம், பாலக்கோடு, காரிமங்கலம், ஏரியூர் ஆகிய ஒன்றியங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில் பாரத பிரதமரின் கிராம அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ரூ.42.46 கோடி மதிப்பில் 79.85 கிலோ மீட்டர் தொலைவிற்கு 18 தார்சாலை அமைக்கும் பணிகள், தமிழ்நாடு ஊரக சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.36.83 கோடி மதிப்பில் 172.87 கிலோ மீட்டர் தொலைவிற்கு 107 தார்சாலை அமைக்கும் பணிகள் உள்பட பல்வேறு திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
தரமாக முடிக்க வேண்டும்
இந்த பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். சாலை பணிகள் உள்ளிட்ட அனைத்து வளர்ச்சி திட்டப்பணிகளும் தரமாகவும், நீண்ட நாட்கள் பயன்பெறும் வகையிலும் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் திவ்யதர்சினி பேசினார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், பசுமை வீடுகள் மற்றும் பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டம், தூய்மை பாரத இயக்கம், ஜல் ஜீவன் மிஷன், பள்ளி கட்டிடங்கள் சீரமைப்பு திட்டம், பாரத பிரதமரின் கிராம அபிவிருத்தி திட்டம், ஆதிதிராவிடர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களின் கீழ் செயல்படுத்தப்படும் சாலைகள் மேம்பாட்டு நிலுவை பணிகள், திட்ட செயலாக்கத்தில் உள்ள இடர்பாடுகள் குறித்து இந்த கூட்டத்தில் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தப்பட்டது.
ஒப்பந்த காலத்திற்குள்
தனிநபர் பயன் பெறும் திட்டங்களின் கீழ் நிலுவையாக உள்ள பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்து ஒப்பந்த காலத்திற்குள் விரைந்து முடிக்க வேண்டும் என்றும் இந்த கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
இதில் ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் முத்துசாமி, உதவி செயற்பொறியாளர்கள், அனைத்து மண்டல அலுவலர்கள், உதவி திட்ட அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி பொறியாளர்கள், பணி பார்வையாளர்கள் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.