மேற்கூரை இடிந்து பெண் படுகாயம்
மேற்கூரை இடிந்து பெண் படுகாயம் அடைந்தார்.;
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் புதிய பஸ் நிலையத்தில் மேற்கூரை பகுதி இடிந்து விழுந்து பெண் படுகாயம் அடைந்தார்.
பயணிகள் நிற்கும் இடம்
கொரோனா ஊரடங்கு தளர்வை தொடர்ந்து ராமநாதபுரம் புதிய பஸ்நிலைய பகுதியில் இருந்து நகர் மற்றும் புறநகர் பஸ்கள் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றன. இந்த சூழ்நிலையில் நேற்று காலை ராமநாதபுரம் புதிய பஸ்நிலைய பகுதியில் பயணிகள் நிற்கும் இடத்தில் மேற்கூரை சிமெண்டு காரை திடீரென்று மளமளவென்று இடிந்து விழுந்தது.
பெரிய பெரிய துண்டுகளாக சிமெண்டு காரைகள் இடிந்து விழுந்ததில் அந்த பகுதியில் உட்கார்ந்து பூ விற்பனை செய்து கொண்டிருந்த எம்.எஸ்.கே.நகரை சேர்ந்த ரஞ்சனி (வயது35) என்ற பெண் மீது இடிபாடுகள் விழுந்தது. இதில் அவரின் உடலில் பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டது. மேற்கூரை பகுதி இடிந்து விழுந்ததால் அந்த பகுதியில் நின்றிருந்த பயணிகள் அச்சமடைந்து தலைதெறிக்க பதறி ஓடினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து நகரசபை பணியாளர்கள் அங்கு வந்து கீழே விழுந்த இடிபாடுகளை அகற்றி சுத்தம் செய்தனர்.
சிகிச்சை
படுகாயமடைந்த பெண் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு எக்ஸ்ரே உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. ராமநாதபுரத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட புதிய பஸ்நிலையம் பல ஆண்டுகாலமாக எந்தவித பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப் படாமல் சேதமடைந்து காட்சி அளிக்கிறது. கடந்த 2 மாதகாலமாக பஸ் போக்குவரத்து இல்லாமல் பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.
கோரிக்கை
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி முக்கியமான பழுதுகளை சரிசெய்திருக்கலாம். ஆனால், அதிகாரிகள் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இந்த விபத்து நடந்துள்ளது. மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் முக்கிய பஸ்கள் வந்து செல்லும் இடமாக உள்ளதால் அந்த பகுதியில் பயணிகள் அதிகஅளவில் நிற்பது வழக்கம். இந்த சம்பவம் நடந்தபோது அங்கிருந்த பயணிகளை ஏற்றிக் கொண்டு பஸ் சென்றதால் பயணிகள் யாரும் அந்த இடத்தில் நிற்கவில்லை. இதனால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டு உள்ளது. இதன்பின்னராவது புதிய பஸ்நிலையத்தில் உள்ள கட்டிட பழுதுகளை உடனடியாக சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து தரப்பு மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.