திருச்சியில் பரபரப்பு: போலீஸ் இன்ஸ்பெக்டர் பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கிய ஆசாமி

திருச்சியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கிய ஆசாமியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2021-06-29 18:31 GMT

திருச்சி,
திருச்சியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கிய ஆசாமியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பணம் பறிக்கும் கும்பல்

சமூக வலைதளங்கள் மூலம் உலகம் முழுவதிலும் ஆன்-லைன் மோசடி அதிக அளவில் நடைபெற்று வருகிறது. தமிழகத்திலும் பிரபல நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல்வாதிகள், போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்டோரின் பெயர்களை பயன்ப டுத்தி சமூக வலைதளங்களில் போலியாக கணக்கு தொடங்கி பொதுமக்களிடம் நூதன முறையில் பண மோசடி செய்து வருகின்றனர்.

இதை தடுக்கும் வகையில் சைபர் கிரைம் போலீசார் பல்வேறு முயற்சிகள் செய்து வருகின்றனர். மேலும், பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருப்பதற்காக அறிவுரைகளும் சொல்லப்பட்டு வருகின்றன.

போலீஸ் இன்ஸ்பெக்டர் பெயரில்..

திருச்சி ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் உமாசங்கர். அவர், போலீஸ் நிலையம் முன்பு இரு சக்கர வாகனத்தில் காக்கி உடையணிந்து இருக்கும் புகைப்படத்தை வைத்து, அவரது பெயரில் சில சமூக விரோதிகள் போலி முகநூல் கணக்கை தொடங்கி, அவரது நட்பு வட்டாரத்தில் உள்ளவர்களிடம் பணத்தை பறித்து வருவதாக இன்ஸ்பெக்டர் உமாசங்கருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.

இதை கேள்விப்பட்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். பின்னர், உடனடியாக முகநூல் பக்கத்தில், தன் பெயரில் போலி ஐ.டி. இருப்பதை தெரிந்து கொண்டார். அதைத்தொடர்ந்து உமாசங்கர், தனது உண்மையான முகநூல் கணக்கில், எனது பெயரில் போலி முகநூல் கணக்கை மர்ம நபர் யாரோ தொடங்கி இருப்பதாகவும், அதனை பொதுமக்கள், நண்பர்கள், உறவினர்கள் மற்றும் யாரும் நம்பி பணத்தை இழந்து ஏமாற வேண்டாம் என பதிவு செய்துள்ளார். 

இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசிலும் புகார் செய்யப்பட்டுள்ளது. இதுபோல ஏற்கனவே, திருச்சி மத்திய சிறை அங்காடி சூப்பிரண்டு திருமுருகன் பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி மர்ம நபர்கள் பணம் கேட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்