திருச்சியில் ‘சதம்' அடித்த பெட்ரோல் விலை; வாகன ஓட்டிகள் புலம்பல்

திருச்சியில் பெட்ரோல் விலை சதத்தை தாண்டி சென்று விட்டது. இதனால், வாகன ஓட்டிகள் புலம்பி தவித்து வருகிறார்கள்.;

Update: 2021-06-29 18:31 GMT
திருச்சி,
திருச்சியில் பெட்ரோல் விலை சதத்தை தாண்டி சென்று விட்டது. இதனால், வாகன ஓட்டிகள் புலம்பி தவித்து வருகிறார்கள்.

தினமும் விலையேறும் பெட்ரோல் விலை

இந்தியாவில் மக்கள் தொகை பெருக்கத்திற்கேற்ப வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து விட்டது. மோட்டார் வாகனங்கள் இல்லாத வீடுகளே இல்லை என்ற நிலை உள்ளது. ஒரு வீட்டில் குறைந்தது ஒரு மொபட்டாவது வைத்திருக்கிறார்கள். 
வசதி படைத்தவர்கள் வீட்டில் 2 அல்லது 3 இருசக்கர வாகனங்கள் மற்றும் கார் என ஆடம்பரமாக வைத்துள்ளனர். இந்த நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையும் தினமும் எகிறியபடியே உள்ளது. இந்த விலை உயர்வு நிர்ணயம் செய்வதை, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள எண்ணெய் நிறுவனங்களே முடிவு செய்வதாக மத்திய அரசு கூறி வருகிறது.

திருச்சியில் சதத்தை தாண்டியது

மேலும் எண்ணெய் விலை உயர்வு, 5 மாநில சட்டசபை தேர்தலுக்கு பின்னரே எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருவதாகவும் லாரி உரிமையாளர்கள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தினமும் பெட்ரோல், டீசல் விலை ஏறுமுகமாவே இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று திருச்சியில் பெட்ரோல் விலை சதத்தை தாண்டியது. இதனால், இருசக்கரம் மற்றும் 4 சக்கவர வாகன ஓட்டிகள் புலம்பி தவித்து வருகிறார்கள். இதனால், காய்கறிகள் விலை உயரவும், வாகனங்களின் வாடகை கணிசமாக உயரவும் வாய்ப்புள்ளது என்றனர்.

லிட்டர் 100 ரூபாய் 30 காசு

திருச்சியில் நேற்று முன்தினம் 1 லிட்டர் பெட்ரோல் 99 ரூபாய் 98 காசுகளாக இருந்தது. டீசல் லிட்டர் ஒன்றுக்கு 93 ரூபாய் 96 காசுகளாக இருந்தது. ஆனால், நேற்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 32 காசுகள் அதிகரித்து 100 ரூபாய் 30 காசுகளாக உயர்ந்தது. பிரிமியம் பெட்ரோல் லிட்டர் 103 ரூபாய் 43 காசாக உயர்ந்தது.

இதுபோல டீசல் லிட்டருக்கு 27 காசுகள் அதிகரித்து 94 ரூபாய் 23 காசுகளாக இருந்தது. டர்போ டீசல் 97 ரூபாய் 25 காசாக விலை அதிகரித்தது.
இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் எரிபொருள் விலையேற்றத்தில் சிறிய மாறுபாட்டை கொண்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்