பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்களை தரையில் கொட்டி அழிப்பு
வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்களை தரையில் கொட்டி போலீசார் அழித்தனர்.;
பொள்ளாச்சி
வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்களை தரையில் கொட்டி போலீசார் அழித்தனர்.
மதுபாட்டில்கள் பறிமுதல்
கோவை மாவட்டம் பேரூர் மதுவிலக்கு போலீஸ் நிலையம் பொள்ளாச்சியில் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தையையொட்டி கேரள மாநிலம் இருப்பதால், அங்கிருந்து மதுபாட்டில்களை அதிகமாக பொள்ளாச்சிக்கு கடத்தி வருகின்றனர்.
இதை தவிர டாஸ்மாக் கடைகளில் இருந்து குறைந்த விலைக்கு மதுபாட்டில்களை வாங்கி, சிலர் சட்டவிரோதமாக அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர்.
இதை தடுக்க மதுவிலக்கு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை பாதுகாப்பாக பொள்ளாச்சி வெங்கடேசா காலனியில் உள்ள மதுவிலக்கு போலீஸ் நிலையத்தில் வைத்திருந்தனர்.
கலெக்டர் உத்தரவு
இந்த நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை அழிக்க கோவை மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.
அதன் பேரில் பொள்ளாச்சியை அடுத்த ஆ.சங்கம்பாளையத்தில் உள்ள அரசு புறம்போக்கு குட்டை பகுதிக்கு மதுபாட்டில்களை போலீசார் சரக்கு வாகனத்தில் எடுத்து வந்தனர்.
அங்கு மதுவிலக்கு போலீஸ் துணை சூப்பிரண்டு சுந்தர்ராஜ், கோட்ட கலால் அதிகாரி சந்திரா ஆகியோர் முன்னிலையில் மதுபாட்டில்களை இறக்கி எண்ணிக்கை சரிபார்க்கப்பட்டது.
அப்போது இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் சின்னகாமணன், கோட்ட கலால் வருவாய் ஆய்வாளர் சரண்ராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.
தரையில் கொட்டி அழித்தனர்
பின்னர் போலீசார் மதுபாட்டில்களின் மூடியை கழற்றி அதற்குள் இருந்த மதுபானங்களை குட்டையில் கொட்டி அழித்தனர்.
இதுகுறித்து மதுவிலக்கு போலீசார் கூறுகையில், கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் டிசம்பர் வரை 2,577 மதுபாட்டில்கள் மற்றும் 49 பீர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தற்போது இந்த மதுபானங் கள் அழிக்கப்பட்டன. மூடியுடன் காலிபாட்டில்களை ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.