கம்யூனிஸ்டுகள் - விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நூதன ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மயிலாடுதுறையில் கம்யூனிஸ்டுகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆட்டோவை கயிற்றில் கட்டி இழுத்து சென்று நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை:
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மயிலாடுதுறையில் கம்யூனிஸ்டுகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆட்டோவை கயிற்றில் கட்டி இழுத்து சென்று நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் முன்பு பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் பி. சீனிவாசன் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போவதால், பெட்ரோல் டீசல் விலையை உடனே மத்திய அரசு குறைக்க வேண்டும். கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட வருமான வரம்பிற்குள் வராத அனைத்து குடும்பங்களுக்கும் மாதம் ரூ.7 ஆயிரத்து 500 வழங்க வேண்டும். நபர் ஒன்றிற்கு 10 கிலோ உணவு தானியங்கள் மத்திய தொகுப்பில் இருந்து இலவசமாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
ஆட்டோவை கயிற்றில் கட்டி
முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் இருந்து பேரணியாக புறப்பட்டனர். அப்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வால் வாகனங்கள் இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதை குறிக்கும் வகையில் ஆட்டோவை கயிற்றில் கட்டி இழுத்து வந்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் ஏ.சீனிவாசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வட்ட செயலாளர் மேகநாதன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் துரைராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் வேலு குணவேந்தன், கதிர்வளவன், மோகன்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.