இன்று முதல் கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் தடகளம், நடைபயிற்சிக்கு அனுமதி

கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் இன்று முதல் தடகளம், நடைபயிற்சி மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-06-29 17:47 GMT
கடலூர், 


தமிழகத்தில் கொரோனா வைரஸ் 2-வது அலை பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பொதுமக்கள் அதிகளவில் கூடும் பூங்காக்கள், கடற்கரைகள், விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்டவை கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில் மூடப்பட்டன.


 அந்த வகையில் கடலூர் அண்ணா விளையாட்டு மைதானமும் மூடப்பட்டது.
இதனால் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பயிற்சி மேற்கொள்ள முடியாமல் செய்வதறியாது தவித்தனர். இதுதவிர தினசரி காலை, மாலை வேளையில் நடைபயிற்சி மேற்கொள்ளும் பொதுமக்களும் நடைபயிற்சிக்கு செல்லாமல் வீடுகளிலேயே முடங்கினர்.

தளர்வுகள்

இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக அரசு, ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. அதன்படி கடந்த வாரம் உள்ளாட்சி பகுதியில் உள்ள விளையாட்டு மைதானம் மற்றும் பூங்காக்கள் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்வதற்காக திறக்கப்பட்டது. 

மேலும் நேற்று முன்தினம் முதல் கடற்கரைகளில் அதிகாலை 5 மணி முதல் காலை 9 மணி வரை பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள அரசு அனுமதி அளித்தது. ஆனால் நகராட்சி பகுதியில் உள்ள விளையாட்டு மைதானங்களில் நடைபயிற்சி மேற்கொள்ள தொடர்ந்து தடை நீடித்தது.

இதற்கிடையே நகராட்சி பகுதியில் உள்ள விளையாட்டு மைதானங்களை 30-ந் தேதி (அதாவது இன்று) முதல் திறக்க நேற்று அரசு அனுமதி அளித்தது. அதன்படி கடலூர் அண்ணா விளையாட்டு மைதானம் சுமார் 2½ மாதங்களுக்கு பிறகு நடைபயிற்சிக்காக திறக்கப்பட உள்ளது. இதையொட்டி விளையாட்டு மைதானத்தில் நேற்று ஊழியர்கள் பராமரிப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர்.


நடைபயிற்சிக்கு அனுமதி

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் இன்று (புதன்கிழமை) முதல் நடைபயிற்சி, தடகளம், வாலிபால் பயிற்சி மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

 மேலும் மைதானத்தில் உள்ள உடற்பயிற்சி கூடம், யோகா பயிற்சியில் 50 சதவீத நபர்களுக்கு மட்டுமே பயிற்சி அளிக்கப்படும். தினசரி காலை 6 மணி முதல் 8 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 7 மணி வரையும் மட்டுமே விளையாட்டு மைதானத்தில் பயிற்சிக்கு அனுமதி அளிக்கப்படும் என்றார்.

மேலும் செய்திகள்