கூடங்குளம் அணுமின் நிலைய விரிவாக்க பணியை நிறுத்த வேண்டும்; உதயகுமார் வலியுறுத்தல்
கூடங்குளம் அணுமின் நிலைய விரிவாக்கப்பணியை உடனடியாக நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அணுஉலை எதிர்ப்பாளர் உதயகுமார் வலியுறுத்தினார்.
தூத்துக்குடி:
கூடங்குளம் 5, 6-வது அணு உலை விரிவாக்கப்பணிகள் நடைபெறுவதை நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர் உதயகுமார் தலைமையில் அந்த பகுதி பொதுமக்கள், மீன்வளம், மீனவர் நலம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் நேற்று மனு அளித்தனர். இதைத்தொடர்ந்து கூடங்குளம் அணுஉலை போராட்டம் தொடர்பாக போடப்பட்ட வழக்குகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாபஸ் பெற்றதற்கு அமைச்சரிடம் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர். பின்னர் உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 5, 6-வது அணு உலைகளுக்கு கான்கிரீட் போடும் நிகழ்வை அணுமின் நிலைய நிர்வாகம் அறிவித்திருக்கிறது. ஏற்கனவே முதல் அணுஉலை 70 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கிறது. 2-வது அணு உலையிலும் தொடர்ந்து பழுது ஏற்பட்டு மே மாதம் மட்டுமே மூன்று முறை அடைத்து வைத்திருக்கிறார்கள். இந்த நிலையில் திடீரென 5, 6-வது அணு உலைகளுக்கு தொடக்க நிகழ்வுகள் நடத்துவதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் கேடு விளைவிக்கக்கூடிய இந்த கூடங்குளம் அணுமின் நிலைய விரிவாக்கத்தை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். அங்கு அணுக்கழிவு மையத்தை அமைக்கக்கூடாது என்று முதல்-அமைச்சரை நாங்கள் சந்தித்து கோரிக்கை வைக்க இருக்கிறோம். அதன் அங்கமாக இன்றைக்கு மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை சந்தித்து அந்த விண்ணப்ப மனு கொடுத்திருக்கிறோம்.
3 ஆண்டுகளுக்கு மேலாக எங்கள் பகுதி மீனவ மக்களும், விவசாய மற்றும் வணிக பெருங்குடி மக்களும் சேர்ந்து போராட்டம் நடத்தினோம். அப்போது இருந்த அ.தி.மு.க. அரசு எங்கள் மக்கள் கோரிக்கைகளை கடுகளவும் மதிக்கவில்லை. கூடங்குளம் அணுமின் நிலையம் என்பது முழுக்க முழுக்க மத்திய அரசினுடைய பொறுப்பு. அவர்கள் ஜனநாயகத்தை மதிக்காததால் வந்த வினை. ஆனால், நாங்கள் தொடர்ந்து எங்களுடைய வாழ்வுரிமைக்காகவும், வாழ்வாதார உரிமைகளுக்காகவும் குரல் கொடுப்போம். தேவைப்பட்டால் களம் இறங்கிப்போராடவும் செய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.