தூத்துக்குடியில் 622 கிலோ போலி லேபிளுடன் கூடிய உப்பு பைகள் பறிமுதல்

தூத்துக்குடியில் 622 கிலோ போலி லேபிளுடன் கூடிய உப்பு பைகளை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2021-06-29 16:51 GMT
தூத்துக்குடி;
தூத்துக்குடி மாவட்டத்தில் போலியாக உப்பு பண்டல்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. அதன்பேரில் தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மாரியப்பன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சக்திமுருகன், காளிமுத்து ஆகியோர் தூத்துக்குடி மாநகரம் மற்றும் பழையகாயல் பகுதியில் உப்பு பண்டல்களை திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, தூத்துக்குடி பெரிய கடைவீதியில் உள்ள ஒரு தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாக அலுவலகத்தில் ஆய்வு செய்யும்போது, அந்த நிறுவன தயாரிப்பு அல்லாத பிராண்ட்களின் பெயருடன் அதாவது போலி லேபிளுடன் பேக்கிங் பவுச்சுகள் இருந்தன. அந்த நிறுவனத்துக்கு உரிய பேக்கிங் பவுச்சுகளிலும் முழுமையான தயாரிப்பு முகவரி இல்லாமலும், உணவு பாதுகாப்பு உரிம எண் அச்சிடப்படாமலும் சுமார் 622 கிலோ பைகள் இருந்தன.

இதைத்தொடர்ந்து அதிகாரிகள் அந்த பைகளை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும். தொடர்ந்து நடத்திய விசாரணை அடிப்படையில், பழையகாயல் பகுதியில் உள்ள உப்பு தயாரிப்பு ஆலையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அங்கு அந்நிறுவனத்தைச் சாராத முழுமையான முகவரியில்லாமல் முறைகேடான முறையில் தயாரிக்கப்பட்ட உப்பு பாக்கெட்டுகள் சுமார் 1,350 கிலோ அளவில் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த உப்பு பாக்கெட்டுகளில் இருந்து உணவு மாதிரி எடுத்து பகுப்பாய்வுக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

மேலும் உப்பு தயாரிப்பாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்கள் உப்பு பாக்கெட்டுகளில் உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-ன் வரையறையின்படி உரிய லேபிள் விவரங்களை அச்சிட வேண்டும். குறிப்பாக தொடர்பு முகவரியை தெளிவாக குறிப்பிட வேண்டும். மேலும், வரையறுக்கப்பட்ட அளவு அயோடின் சேர்த்து உப்பை பொட்டலமிட வேண்டும். உணவுக்கான உப்பு மற்றும் இதர பயன்பாட்டிற்கான உப்பு தயாரிப்பாளர்கள் உணவு பாதுகாப்பு உரிமம் எடுக்க வேண்டும். தவறும்பட்சத்தில் மேற்கூறிய சட்டத்தின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்