செங்கம் அருகே ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் ஊராட்சி செயலாளர் கைது

செங்கம் அருகே நிலுவை சம்பளத்தொகை வழங்குவதற்கு தூய்மை பணியாளரிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் ஊராட்சி செயலாளரை, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-06-29 16:45 GMT
செங்கம்

ரூ.5 ஆயிரம் லஞ்சம் 

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காயம்பட்டு ஊராட்சியில் தூய்மை பணியாளராக பணி செய்து வருபவர் இந்திரா. இவர் தனக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவை சம்பளத் தொகையை வழங்கக்கோரி ஊராட்சி செயலாளரிடம் மனு அளித்தார். ஆனால் இந்த மனு மீது நடவடிக்கை எடுக்க ஊராட்சி செயலாளர் ஸ்ரீதேவி ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

 அதைத்தொடர்ந்து இந்திரா ரூ.2 ஆயிரம் தருவதாக கூறியிருக்கிறார். ஆனால் ரூ.5 ஆயிரம் தந்தால்தான் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மனு மீது நடவடிக்கை எடுப்பார்கள் என கூறியுள்ளார். 

பெண் ஊராட்சி செயலாளர் கைது

இதனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத இந்திரா இதுகுறித்து வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் ஊராட்சி செயலாளர் ஸ்ரீதேவியை கையும்களவுமாக பிடிக்க முடிவு செய்தனர். அதற்காக ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை ஸ்ரீதேவியிடம் கொடுக்கச் சொல்லி நேற்று இந்திராவை அனுப்பி வைத்தனர். 

அதன்படி ஊராட்சி செயலாளர் ஸ்ரீதேவியிடம் அவருடைய வீட்டின் அருகே சென்று பணத்தை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை துணைபோலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு)  யுவராஜ் தலைமையிலான போலீசார், ஊராட்சி செயலாளர் ஸ்ரீதேவியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

மேலும் அவரை திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்