22 கிலோ கஞ்சா கடத்திய வாலிபருக்கு 10 ஆண்டு சிறை
22 கிலோ கஞ்சா கடத்திய வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.;
மதுரை,ஜூன்.
தேனி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் வந்தது. அதன் பேரில் கடந்த 6.6.2019 அன்று தேனி மாவட்டம் பூதிப்புரம் அருகில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனையிட்டதில் 22 கிலோ கஞ்சா கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் கஞ்சாவை கைப்பற்றியதுடன், மோட்டார் சைக்கிளில் வந்த உசிலம்பட்டியைச் சேர்ந்த தமிழ்செல்வன் (வயது 39) என்பவரை கைது செய்தனர்.
இதையடுத்து அவர் மீது போதைப்பொருள் கடத்தல் வழக்குப் பதிவு செய்து, சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது போதைப்பொருள் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. அரசு தரப்பில் வக்கீல் ராஜசேகரன் ஆஜரானார்.
விசாரணை முடிவில், தமிழ்செல்வன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி புளோரா நேற்று தீர்ப்பளித்தார்.