நாமக்கல், மோகனூர் பகுதிகளில் கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு

நாமக்கல், மோகனூர் பகுதிகளில் கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளை கலெக்டர் ஸ்ரேயாசிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2021-06-29 16:09 GMT
நாமக்கல்
நாமக்கல், மோகனூர் பகுதிகளில் கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளை கலெக்டர் ஸ்ரேயாசிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கலெக்டர் ஆய்வு
நாமக்கல் மாவட்டத்தில் சேந்தமங்கலம் மற்றும் காளப்பநாயக்கன்பட்டி பேரூராட்சிகள் உள்பட 318 கிராம குடியிருப்பு மக்களின் குடிநீர் தேவைக்காக கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்பட்டு வருகின்றது. இந்த திட்டமானது காவிரி ஆற்றை நீராதாரமாக கொண்டு ஒரு நீர் சேகரிப்பு கிணறு, 6 நீர் உறுஞ்சு கிணறுகள் அமைக்கப்பட்டு தற்போது 10.41 எம்.எல்.டி குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மோகனூர் ஊராட்சி ஒன்றியம் ஒருவந்தூர் பகுதியில் காவிரி ஆற்றில் கட்டப்பட்டு உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் கூட்டுக்குடிநீர் திட்ட தலைமை நீரேற்று நிலையத்தை கலெக்டர் ஸ்ரேயாசிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து நீரேற்று நிலையத்தில் உள்ள மின்மோட்டர்களின் இயக்கம் குறித்து ஆய்வு செய்தார்.
தரைமட்ட நீர்தேக்க தொட்டி
மேலும் என்.புதுப்பட்டி ஊராட்சியில் உள்ள குக்கிராமங்களுக்கு காவிரி குடிநீர் தனியாகவும், ஊராட்சிக்கு உட்பட்ட கிணறுகளில் இருந்து பெறப்படும் நீர் ஆதாரத்தின் மூலம் குடிநீர் அல்லாத பிற உபயோகங்களுக்கான நீர் தனியாகவும், முறை வைத்து வழங்கப்படுவதை உறுதி செய்தார். பிற ஊராட்சிகளிலும் காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட நீரை தனியாகவும், பிற உபயோகங்களுக்கான நீரை தனியாகவும் பொதுமக்களுக்கு வழங்க உரிய ஏற்பாடுகளை மேற்கொள்ள உள்ளாட்சித்துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
பின்னர், நாமக்கல் ஊராட்சி ஒன்றியம் சிவியாம்பாளையம் ஊராட்சி கட்டபொம்மன் நகரில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் 4½ லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியில் இருந்து, குடியிருப்பு பகுதிகளுக்கு நீரேற்றம் செய்யப்படும் குடிநீரின் அளவு குறித்து கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தெருவிளக்குகள்
இந்த ஆய்வுகளின்போது பொதுமக்களிடம் குடிநீர் வழங்கப்படும் நாட்களின் சுழற்சி குறித்தும், தெரு விளக்குகள் சரியாக இயங்குகின்றதா? என்றும் கேட்டறிந்தார். தெருவிளக்குகள் பழுதுபட்டால் உடனடியாக சீர் செய்ய வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் ராஜமாணிக்கம், உதவி செயற்பொறியாளர்கள் வரதராஜன், அகிலாபானு, ஊராட்சிகள் உதவி இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் மோகனூர், நாமக்கல், சேந்தமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்