தேனி உள்பட 40 இடங்களில் கம்யூனிஸ்டுகள், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 2வது நாளாக ஆர்ப்பாட்டம்
தேனி உள்பட 40 இடங்களில் கம்யூனிஸ்டுகள், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சார்பில் 2-வது நாளாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தேனி:
தேனி உள்பட 40 இடங்களில் கம்யூனிஸ்டுகள், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சார்பில் 2-வது நாளாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விடுதலை சிறுத்தைகள்
பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும், கொரோனா தடுப்பு மருந்து மற்றும் உயிர் காக்கும் மருந்துகளின் கள்ள வணிகத்தை தடுக்க வேண்டும், தமிழகத்துக்கு கூடுதல் தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கம்யூனிஸ்டுகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் 3 நாட்கள் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, தேனி மாவட்டத்தில் 20 இடங்களில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்தநிலையில் நேற்று 2-வது நாளாக தேனி, வீரபாண்டி, அன்னஞ்சி, ஜெயமங்கலம், வடுகபட்டி, அரண்மனைப்புதூர் உள்பட மாவட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
நூதன ஆர்ப்பாட்டம்
ஜெயமங்கலத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் நாகரத்தினம் தலைமை தாங்கினார். அரண்மனைப்புதூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்டக்குழு உறுப்பினர் தர்மர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அன்னஞ்சியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் ராஜதுரை மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
வீரபாண்டியில் நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஸ்கூட்டரை கயிறு கட்டி இழுத்து வந்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் நாகராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டனர். மற்ற இடங்களிலும் அந்தந்த பகுதிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.