போலீசாரின் மதிப்பை உயர்த்தும் வகையில் பணியாற்ற வேண்டும்
போலீசாரின் மதிப்பை உயர்த்தும் வகையில் பணியாற்ற வேண்டும்
கோவை
சிறப்பாக செயல்பட்டு போலீசாரின் மதிப்பை உயர்த்தும் வகையில் பணியாற்ற வேண்டும் என்று கோவை சரக டி.ஐ.ஜி. முத்துசாமி அறிவுறுத்தி உள்ளார்.
கோவை சரக போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி நிருபர்களிடம் கூறியதாவது
5 உத்தரவுகள்
கோவை சரகத்தில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்டங்க ளில் காவல்துறை சிறப்பாக செயல்பட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக ஒவ்வொரு துணை சூப்பிரண்டு களின் நிர்வாகத்தின்கீழ் 6 போலீஸ்நிலையங்கள் வருகிறது. எனவே அனைத்து துணை சூப்பிரண்டுகளும் 5 முக்கிய உத்தரவுகளை பின்பற்ற ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
முதலாவதாக, காவல்துறையின் மதிப்பை பொதுமக்களிடம் உயர்த்த வேண்டும்.
அடுத்து சரியாக பணியாற்றாத காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதைவிட, அவர்களுக்கு அறிவுரை கூறி நல்வழிப் படுத்த வேண்டும்.
கஞ்சா, லாட்டரி, மது, திருட்டு, விபசாரம் உள்ளிட்ட 12 குற்றங்களை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வழக்குப்பதிவு
புகார் கொடுக்க வரும் பொதுமக்களிடம் புகாரை பெற்று, ரசீது (சி.எஸ்.ஆர்.) வழங்க வேண்டும். அதன்பின்னர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும். விறுப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு சரியான முறையில் வழக்குகளை பதிவு செய்ய வேண்டும்.
போலீஸ் துணை சூப்பிரண்டுகள் தங்களுக்கு கீழ் உள்ள போலீஸ் நிலையங்களை சிறப்பாக நிர்வகிக்க, ஆள் எண்ணிக்கை அதிகம் உள்ள போலீஸ் நிலையங்களில் இருந்து குறைந்த எண்ணிக்கையில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு ஆட்களை தற்காலிகமாக மாற்றி சட்டம்- ஒழுங்கு, குற்றத்தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்.
இந்த 5 உத்தரவுகளை செயல்படுத்துமாறு போலீஸ் துணை சூப்பிரண்டுகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
மாவோயிஸ்டுகள்
கோவை மற்றும் நீலகிரி எல்லை பகுதிகளில் கேரள மாவோயிஸ்டு களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.