ஜோலார்பேட்டை அருகே மகனை மொட்டை மாடியில் இருந்து கீழே தள்ளியவர் கைது
ஜோலார்பேட்டை அருகே மது குடிக்க பணம் கொடுக்காததால் ஆத்திரமடைந்து மகனை மாடியில் இருந்து கீழே தள்ளிய தந்தையை போலீசார் கைது செய்தனர்.;
ஜோலார்பேட்டை,
ஜோலார்பேட்டையை அடுத்த கருப்பனூர் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 67). இவரது மனைவி கடந்த வருடம் இறந்து விட்டார். இதனால் ராஜ்குமார் தனது மகன்கள் ராமச்சந்திரன், மஞ்சுநாதன் (22) மற்றும் மகள் அர்ச்சனா ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார். மனைவி இறந்ததில் இருந்து ராஜ்குமார் மதுவுக்கு அடிமையாகி விட்டார். மது குடிப்பதற்கு தினமும் வீட்டில் பணம் கேட்டு தகராறு செய்வது வழக்கம்.
மேலும் ராமச்சந்திரன் ஓசூரில் தங்கி, வேலை செய்து வருகிறார் இவர் குறிப்பிட்ட தொகையை தனது சகோதரரின் வங்கி கணக்கிற்கு மாதா மாதம் அனுப்பி வைத்தார்.
இதையறிந்த ராஜ்குமார் நேற்று முன்தினம் காலை 10 மணியளவில் மகளிடம் மது வாங்க பணம் கேட்டார். ஆனால் அர்ச்சனா பணம் தர மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த ராஜ்குமார் மகளை தாக்கினார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மஞ்சுநாதன், அர்ச்சனா ஆகியோர் தந்தை தாக்கியது குறித்து வீட்டின் மொட்டை மாடியில் நின்று கொண்டு பேசிக்கொண்டு இருந்தனர்.
மாடியில் இருந்து தள்ளினார்
அப்போது ராஜ்குமார் மொட்டை மாடிக்கு சென்றார். அவரிடம் மஞ்சுநாதன் ஏன் அக்காவை தாக்கினாய் என கேட்டதற்கு ராஜ்குமார், நீ உயிரோடு இருந்தால் தான் என்னை கேள்வி கேட்கிறாய், என கூறி தான் மறைத்து வைத்திருந்த பிளேடால் தலை மற்றும் முகத்தின் மீது கிழித்து தாக்கினார். மேலும் ராஜ்குமார் மஞ்சுநாதனை மொட்டை மாடியில் இருந்து கீழே தள்ளி விட்டார்.
இதில் மயங்கி கிடந்த மஞ்சுநாதனை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தந்தை கைது
இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாந்தி வழக்குப்பதிவு செய்து ராஜ்குமாரை கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.