2 மாதங்களுக்கு பிறகு வழிபாட்டுக்கு அனுமதி: திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்கள் திரண்டு வந்து சாமி தரிசனம்
திருத்தணி முருகன் கோவிலில் 63 நாட்களுக்குப் பிறகு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்தனர்.;
பள்ளிப்பட்டு,
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடான திருக்கோவில் மலை மேல் அமைந்துள்ளது. இந்த கோவில் தமிழக அரசின் கொரோனா கால ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 26-ந்தேதி மூடப்பட்டது. ஆனாலும் தமிழக அரசின் உத்தரவின் பேரில், திருக்கோவிலில் ஆகம விதிகளின்படி பூஜைகள் நடைபெற்று வந்தது.
தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் தமிழகத்தில் குறைந்து வருவதை முன்னிட்டு, முதற்கட்டமாக 4 மாவட்டங்களில் கோவில்களில் பக்தர்கள் வழிபாட்டுக்கு அனுமதி அளித்தது. அதன்பேரில் இந்து அறநிலைத்துறை வழிகாட்டுதலின் பேரில், திருத்தணி சுப்பிரமணிய சாமி கோவில் முழுவதும் கிருமிநாசினி கொண்டு தூய்மைப்பணி செய்யப்பட்டது.
நேற்று காலை 6 மணி முதல் இந்த கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அணிந்து சாமி தரிசனம் செய்ய வந்தனர். 63 நாட்கள் கழித்து முருகப்பெருமானின் தரிசனத்தைக் காண பக்தர்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
நேற்று காலை முதல் திருத்தணி மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் காலையிலிருந்து பெய்து வரும் சாரல் மழையையும் பொருட்படுத்தாமல் ‘அரோகரா,’ ‘அரோகரா’ என்று கோஷமிட்டபடி முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். மூலவர் முருகப்பெருமானுக்கு சிறப்பு புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார்.