அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் பாதுகாப்பு குறித்து கலெக்டர் ஆய்வு
அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் பாதுகாப்பு குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்
சேலம்
தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை 4 மாதங்களுக்கு ஒரு முறை ஆய்வு செய்து அதன் பாதுகாப்பு தன்மையை அரசியல் கட்சியினர் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அனுப்பி வைக்க வேண்டும். அதன்படி, சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளன. அந்த அறைக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதுதவிர மீதமுள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் பயிற்சிக்காக பயன்படுத்தப்பட்ட எந்திரங்கள் ஆகியவையும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
இந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக உள்ளதா? என ஆய்வு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி, நேற்று காலை சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கார்மேகம் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ள பாதுகாப்பு அறை திறக்கப்பட்டது.
இதையடுத்து கலெக்டர் கார்மேகம் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் இந்த பாதுகாப்பு அறைக்குள் சென்று மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்த்தனர். இந்த ஆய்வின்போது மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் தியாகராஜன், தனி தாசில்தார் சிராஜூதீன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.