தென்காசியில் பஸ் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது; பொதுமக்கள் மகிழ்ச்சி

தென்காசியில் பஸ் போக்குவரத்து மீண்டும் தொடங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.;

Update:2021-06-29 02:09 IST
தென்காசி:
1½ மாதங்களுக்கு பிறகு தென்காசியில் பஸ் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது. இயல்பு நிலை திரும்பியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஊரடங்கில் தளர்வுகள்

கொரோனா பரவல் தமிழகத்தில் குறையத் தொடங்கியதால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. கொரோனா தொற்று குறைந்த 23 மாவட்டங்களில் பஸ் போக்குவரத்து நேற்று முதல் தொடங்கப்பட்டது.
அதன்படி தென்காசி மாவட்டத்தில் 1½ மாதங்களுக்கு பிறகு பஸ் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது. காலை 6 மணி முதல் மாவட்டத்தில் தென்காசி, சங்கரன்கோவில், புளியங்குடி, செங்கோட்டை ஆகிய நான்கு பணிமனைகளில் இருந்தும் பஸ்கள் புறப்பட்டுச் சென்றன. மொத்தம் உள்ள 250 பஸ்களில் 215 பஸ்கள் நேற்று இயங்கின.

பொதுமக்கள் மகிழ்ச்சி

செங்கோட்டையில் விரைவு போக்குவரத்து கழகத்தில் தொலை தூரம் செல்லக்கூடிய 58 பஸ்களில் 15 பஸ்கள் இயக்கப்பட்டன. பஸ்களில் பயணிகள் முககவசம் அணிந்து அனுமதிக்கப்பட்டனர். இவற்றில் 50 சதவீத பயணிகள் பயணம் செய்தனர். நகர பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணித்தனர். பஸ் போக்குவரத்து தொடங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் செய்திகள்