சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 87 ஆயிரத்தை தாண்டியது
சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 87 ஆயிரத்தை தாண்டியது.
சேலம்
318 பேர் பாதிப்பு
சேலம் மாவட்டத்தில் கொரோனாவின் பாதிப்பு தற்போது நன்றாக குறைந்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் 19-ந் தேதியில் இருந்து கொரோனாவுக்கு 350-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு பிறகு கொரோனாவின் பாதிப்பு 350-க்கும் குறைவாக வந்துள்ளது. அதாவது நேற்று 318 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 65 பேரும், சேலம் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் 138 பேரும், ஆத்தூர் சுகாதார மாவட்டத்தில் 41 பேரும், நகராட்சி பகுதிகளில் 18 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர பிற மாவட்டங்களில் இருந்து சேலம் மாவட்டத்துக்கு வந்த 56 பேருக்கும் கொரோனா நோய் பாதிப்பு இருந்தது தெரியவந்தது.
87 ஆயிரத்தை தாண்டியது
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு, தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 87 ஆயிரத்து 261 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே ஆஸ்பத்திரிகள், கொரோனா சிகிச்சை மையங்களில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 543 பேர் குணமடைந்துவிட்டதால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தொடர்ந்து 2 ஆயிரத்து 230 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் சேலத்தை சேர்ந்த பெண் உள்பட 6 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி பலியாகி உள்ளனர். இவர்கள் உள்பட மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 1,454 ஆக அதிகரித்துள்ளது.