போலீஸ்காரர் மீது தாக்குதல்; 2 பேர் கைது

மானூர் அருகே போலீஸ்காரரை தாக்கியதாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-06-28 20:15 GMT
மானூர்:
மானூர் போலீஸ் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றுபவர் கோபால். இவரும், தலைமை காவலர் அருள்செல்வன் என்பவரும் சேர்ந்து ராமையன்பட்டி சிவாஜி நகர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது சிவாஜி நகரை சேர்ந்த ஆனந்த் (வயது 34) மனைவி வேலம்மாள் என்பவர் போலீசாரிடம் ஓடிவந்து, தனது கணவர் தன்னை அடித்து துன்புறுத்துவதாக கூறியுள்ளார். இதையடுத்து போலீஸ்காரர்கள் இருவரும் தங்கள் மோட்டார்சைக்கிளில் ஆனந்தின் வீட்டிற்கு சென்றனர்.
அங்கு ஆனந்தும், அவரது பக்கத்து வீட்டுக்காரரான மாரியப்பன் (40) என்பவரும் சேர்ந்து வேலம்மாளை அவதூறாக பேசி தாக்க முயன்றனர். இதை தடுக்க முயன்ற போலீஸ்காரர் கோபாலை, நெற்றியில் தாக்கி காயம் ஏற்படுத்தினர். மேலும் போலீசார் மோட்டார்சைக்கிளில் வைத்திருந்த லத்தியை எடுத்து மீண்டும் கோபாலை தாக்கி உள்ளனர்.
இதைபார்த்த மற்றொரு போலீஸ்காரரான அருள்செல்வன் சத்தம் போடவே, கொலை மிரட்டல் விடுத்து விட்டு இருவரும் தப்பி ஓடினர். தாக்குதலில் காயமடைந்த கோபால் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றார். இதுபற்றி மானூர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி ஆனந்த், மாரியப்பனை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்