விளைநிலங்களில் மது அருந்திவிட்டு பாட்டில்களை வீசிச்செல்லும் மதுப்பிரியர்கள்

தா.பழூர் பகுதிக்கு தஞ்சை மாவட்டத்தில் இருந்து கூட்டம், கூட்டமாக வரும் மதுப்பிரியர்கள், விளைநிலங்களில் மது அருந்திவிட்டு மதுபாட்டில்கள், கழிவுகளை அங்கேயே வீசிச்செல்வதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.;

Update: 2021-06-28 20:08 GMT
தா.பழூர்:

தஞ்சை மாவட்ட மதுப்பிரியர்கள்
கொரோனா தொற்று பரவல் காரணமாக முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, அதன் காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. பின்னர் ஊரடங்கில் அளிக்கப்பட்ட தளர்வுகளை தொடர்ந்து, கடந்த 7-ந் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு, செயல்பட்டு வருகின்றன. இதன்படி அரியலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட நிலையில், அருகே உள்ள தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தொற்றின் வேகம் குறையாததால் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை.
இதனால் தஞ்சை மாவட்டத்தில் இருந்து அணைக்கரை பாலம் வழியாக கோடாலி டாஸ்மாக் கடைக்கும், மதனத்தூர் பாலம் வழியாக தா.பழூர் டாஸ்மாக் கடைக்கும் மதுப்பிரியர்கள் கூட்டம், கூட்டமாக வந்து மதுபானங்களை வாங்கிச் செல்கின்றனர். அவர்கள் தா.பழூர் முதல் மதனத்தூர் வரை உள்ள சாலையோர வயல்வெளிகளில் அமர்ந்து மதுபானங்களை அருந்துகின்றனர். அதேபோல் கோடாலி, கண்டியங்கொல்லை போன்ற ஊர்களிலும் சாலையோர வயல்வெளிகளில் மதுப்பிரியர்கள் அமர்ந்து மது அருந்துகின்றனர்.
விவசாயிகள் வேதனை
அப்போது மது அருந்திவிட்டு, காலி மதுபாட்டில்களை வயல்வெளிகளிலேயே போட்டு உடைப்பது, பிளாஸ்டிக் கப்புகள், திண்பண்டங்கள் கொண்டு வந்த பிளாஸ்டிக் பேப்பர்கள் போன்றவற்றை வயல் வெளிகளிலேயே வீசிவிட்டு செல்கின்றனர். ஆடிப்பட்டத்தில் விவசாயம் செய்வதற்காக தொழு உரங்களை வயல்வெளிகளில் விவசாயிகள் கொட்டி வைத்துள்ளனர்.
இந்நிலையில் தா.பழூர் மற்றும் கோடாலி கிராமங்களில் மதுபானங்களை வாங்கும் மதுப்பிரியர்கள் விளைநிலம் என்றும் பாராமல் அதில் அமர்ந்து மதுபானங்களை அருந்துவதும் அருந்திவிட்டு கழிவுகளை அங்கேயே மோசமான நிலையில் விட்டுச் செல்வதுமாக இருப்பது விவசாயிகள் மத்தியில் கடும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. எனவே மதுப்பிரியர்கள் யாருக்கும் இடையூறு இல்லாத இடங்களில் அமர்ந்து மது அருந்திவிட்டு கழிவு பொருட்களை சரியான முறையில் அப்புறப்படுத்த வேண்டும் என்ற விவசாயிகளின் நியாயமான எதிர்பார்ப்பை இனியாவது மதுப்பிரியர்கள் நிறைவேற்றுவார்களா?.

மேலும் செய்திகள்