நெல் மூட்டைகள் லாரிகள் மூலம் அரவைக்கு கொண்டு செல்லப்பட்டன
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக கொள்முதல் நிலையங்களில் இருந்த நெல் மூட்டைகள் லாரிகள் மூலம் அரவைக்கு கொண்டு செல்லப்பட்டன.
கீழப்பழுவூர்:
மழையில் நனைந்து வீணாகின
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றிய பகுதிகளில் இயங்கி வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தற்போது லட்சக்கணக்கான நெல் மூட்டைகள் திறந்த வெளியிலேயே அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. கடந்த 3 நாட்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையால் நெல் கொள்முதல் நிலையங்களில் நீர் தேங்கி, நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகியும், நெல்மணிகள் முளைக்கவும் தொடங்கின. மழைக்காலம் தொடங்குவதற்குள் லட்சக்கணக்கான நெல் மூட்டைகளை அரவைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று விவசாயிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்திருந்தனர். இது குறித்து கடந்த 26-ந் தேதி ‘தினத்தந்தி’ நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.
நெல் மூட்டைகள் அப்புறப்படுத்தப்பட்டன
இதைத்தொடர்ந்து நேற்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக இயக்குனர் ராஜாராம், இப்பகுதியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து முதற்கட்ட நடவடிக்கையாக தற்போது சுள்ளங்குடி கிராமத்தில் ஏரிக்கு நடுவே அமைக்கப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் இருக்கும் நெல் மூட்டைகளையும், குந்தபுரம் கிராமத்தில் இயங்கி வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் இருக்கும் நெல் மூட்டைகளையும் உடனடியாக அப்புறப்படுத்த உத்தரவிட்டார்.
அதன்படி தொழிலாளர்கள் மூலம் லாரிகளில் நெல் மூட்டைகள் ஏற்றப்பட்டு, திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள அரவை நிலையத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றன. மேலும் தொடர்ந்து அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் தேங்கி இருக்கும் நெல் மூட்டைகள் அப்புறப்படுத்தப்படும் என்று அதிகாரி தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும் இப்பகுதி விவசாயிகளும், சமூக ஆர்வலர்களும் நன்றி தெரிவித்துள்ளனர்.