முதல்-மந்திரி பதவிக்காக காங்கிரஸ் கட்சி 4 பாகங்களாக உடைந்துள்ளது - மந்திரி ஆர்.அசோக் பேட்டி

முதல்-மந்திரி பதவிக்காக காங்கிரஸ் கட்சி 4 பாகங்களாக உடைந்து விட்டது என்று மந்திரி ஆர்.அசோக் தெரிவித்துள்ளார்.

Update: 2021-06-28 20:02 GMT
பெங்களூரு:

  பெங்களூரு விதானசவுதாவில் நேற்று வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

4 பாகங்களாக உடைந்து விட்டது

  கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியில் தற்போது எழுந்திருக்கும் பிரச்சினை பற்றி அனைவரும் அறிந்துள்ளனர். முதல்-மந்திரி பதவிக்காக தலைவர்களிடையே மோதல் உருவாகி உள்ளது. எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தலைமையில் அணி, மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் தலைமையில் மற்றொரு, பரமேஸ்வர் தலைமையில் 3-வது அணி மற்றும் 4-வது அணியாக எம்.பி.பட்டீலும் முதல்-மந்திரி பதவிக்கு போட்டியில் இறங்கியுள்ளார்.

  காங்கிரஸ் என்னும் வீட்டில் நுழைவு வாயில் ஒன்றாக இருந்தாலும், தற்போது அந்த வீடு(கட்சி) 4 பாகங்களாக உடைந்து விட்டது. சித்தராமையா ஆதரவாளர்கள், அவர் தான் அடுத்த முதல்-மந்திரி என்று கூறுகிறார்கள். எம்.பி.பட்டீலும் லிங்காயத் சமுதாயத்தின் அடிப்படையில் முதல்-மந்திரி பதவி போட்டியில் நானும் இருப்பதாக சொல்லி இருக்கிறார்.

காங்கிரசுக்கு தகுதி கிடையாது

  இந்த சந்தர்ப்பத்தில் பா.ஜனதா பற்றி குற்றச்சாட்டு கூறுவதற்கு காங்கிரஸ் தலைவர்களுக்கு எந்த தகுதியும் கிடையாது. பா.ஜனதாவில் எப்போதும் முதல்-மந்திரி ஒருவர் தான். எடியூரப்பா தலைமையில் தான் பா.ஜனதா ஆட்சி நடக்கிறது. அவரே தொடர்ந்து முதல்-மந்திரியாக இருப்பார். கொரோனா 3-வது அலையை தடுக்க அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. கொரோனா 3-வது அலையை எதிர் கொள்ளவும் அரசு தயாராகி வருகிறது.

  தற்போது கொரோனா 2-வது அலையை நிர்வகிக்க அமைக்கப்பட்ட மந்திரி குழுவை மாற்றிவிட்டு, வேறு மந்திரிகளுக்கு பொறுப்பு வழங்கப்படலாம். அதுபற்றி முதல்-மந்திரி எடியூரப்பாவின் முடிவு செய்வார். மந்திரி சுதாகர் தன்னை பற்றி விளம்பரம் கொடுத்திருப்பது குறித்து எனக்கு தகவல் வரவில்லை. அவர், சுகாதாரத்துறை சம்பந்தமாக விளம்பரம் கொடுத்தாரா?, வேறு காரணத்திற்காக விளம்பரம் கொடுத்தாரா? என்பது குறித்து அவரிடம் பேச உள்ளேன்.
  இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்