கார் மோதி தாய்-மகள் பலி

நெல்லை அருகே கார் மோதி தாய், மகள் பலியானார்கள்.

Update: 2021-06-28 19:40 GMT
நெல்லை:
மகன் பிறந்தநாளை கொண்டாடிவிட்டு மோட்டார் சைக்கிளில் ஊர் திரும்பியபோது கார் மோதியதில் தாய்-மகள் பலியானார்கள். இது தொடர்பாக கங்கைகொண்டான் போலீஸ் நிலையத்தை உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பிறந்த நாள் கொண்டாட்டம்

நெல்லை அருகே உள்ள சீவலப்பேரியை அடுத்த அலங்காரபேரியை சேர்ந்தவர் எம்பெருமாள் (வயது 30). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி முத்துச்செல்வி (27). இவர்களுக்கு அனுஸ்ரீ (4) என்ற மகளும், அசோக் (1) என்ற மகனும் உண்டு.
இந்த நிலையில் அசோக்கிற்கு நேற்று முன்தினம் பிறந்த நாள். இதை கொண்டாடுவதற்காக எம்பெருமாள் தனது குடும்பத்தினருடன் மோட்டார் சைக்கிளில் நெல்லை அருகே தென்கலத்தில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு சென்றார். பின்னர் அங்கு பிறந்த நாளை கொண்டாடிவிட்டு எம்பெருமாள் தனது மனைவி, குழந்தைகளுடன் அலங்காரபேரிக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். 
நெல்லை அருகே உள்ள கங்கைகொண்டான் நான்குவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, அந்த பகுதியில் ஒரு கார் வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் அந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

தாய்-மகள் பலி

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து எம்பெருமாள் உள்ளிட்ட 4 பேரும் தூக்கி வீசப்பட்டனர். முத்துச்செல்வி, அனுஸ்ரீ ஆகிய 2 பேரும் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். எம்பெருமாள், அசோக் ஆகியோருக்கு அதிர்ஷ்டவசமாக காயம் எதுவும் ஏற்படவில்லை.
இதை பார்த்த அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் படுகாயம் அடைந்த முத்துச்செல்வி, அனுஸ்ரீ ஆகிய 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி முத்துச்செல்வி, அனுஸ்ரீ ஆகியோர் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

போலீஸ் நிலையம் முற்றுகை

இதுகுறித்த புகாரின் பேரில் கங்கைகொண்டான் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெருமாள் வழக்குப்பதிவு செய்தார்.
இதற்கிடையே, விபத்து ஏற்படுத்திய காரை உடனடியாக கண்டுபிடித்து, டிரைவரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி முத்துச்செல்வி உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் கங்கை கொண்டான் போலீஸ் நிலையத்தை நேற்று முற்றுகையிட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். விபத்து நடந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை வைத்து ஆய்வு செய்து வருகிறோம். விரைவில் விபத்து ஏற்படுத்திய கார் குறித்து விசாரணை செய்து டிரைவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் அங்கு இருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை அருகே மகன் பிறந்தநாளை கொண்டாடிவிட்டு மோட்டார் சைக்கிளில் ஊர் திரும்பியபோது கார் மோதியதில் தாய்-மகள் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்