மூதாட்டி குடும்பத்துடன் தர்ணா போராட்டம்
மூதாட்டி குடும்பத்துடன் தர்ணா போராட்டம்
வேலூர்
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு தாலுகா கொத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சரஸ்வதி (வயது 77). இவர் நேற்று தனது 2 மகன்கள், மருமகள்கள், பேரக்குழந்தைகளுடன் வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த சத்துவாச்சாரி போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது மூதாட்டி கூறியதாவது:-
எனது மகன்கள் ரமேஷ், பூபாலன் ஆகியோர் பேரணாம்பட்டு மெயின்ரோட்டில் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் பல ஆண்டுகளாக மளிகை, அடகு கடை நடத்தி வந்ததாகவும், கடந்த 21-ந் தேதி எவ்வித அறிவிப்பும் இன்றி கோவில் நிர்வாகி பொக்லைன் எந்திரம் மூலம் திடீரென கடைகளை இடித்து விட்டதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கடந்த 22-ந் தேதி வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டோம்.
அப்போது போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றார்.