பஸ் போக்குவரத்து தொடங்கினாலும் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு அமல் படுத்தப் பட்டுள்ள நிலையில் பொது போக்குவரத்து தொடங்கியது.;

Update: 2021-06-28 19:14 GMT
விருதுநகர், 
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு அமல் படுத்தப் பட்டுள்ள நிலையில் பொது போக்குவரத்து தொடங்கியது. 
கூடுதல் தளர்வுகள்
கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று முதல் 23 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளுடனான ஊரடங்கை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதன் அடிப்படையில் விருதுநகர் மாவட்டத்திலும் கூடுதல் தளர்வுகளுடனான ஊரடங்கு அமலுக்கு வந்தது. அதன்படி நகை மற்றும் ஜவுளி கடைகள் குளிர்சாதன வசதி இல்லாமல் நேற்று காலை 9 மணி முதல் திறக்கப்பட்டன. ஏற்கனவே காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட்டு வந்த பல்வேறு வணிக நிறுவனங்கள் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்ட நிலையில் அந்த நிறுவனங்கள் 7 மணி வரை செயல்பட்டன. உணவகங்களிலும், டீக்கடைகளிலும் வழக்கம்போல் பார்சல் சேவை மட்டுமே அனுமதிக்கப்பட்டது.
பொது போக்குவரத்து
 நேற்று காலை 6 மணி முதல் போக்குவரத்து கழக பஸ்கள் இயக்கப்பட்டன. வெளியூர் செல்லும் பஸ்களில் கூட்டம் மிக குறைவாகவே காணப்பட்டது. டவுன் பஸ்களில் ஓரளவு பயணிகள் கூட்டம் இருந்தாலும் பஸ் ஊழியர்கள் முக கவசம் அணிந்த பயணிகளை மட்டுமே பயணம் செய்ய அனுமதித்தனர்.
 சாதாரண கட்டண டவுன் பஸ்களில் பெண்கள் இலவச பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இதனால் டவுன் பஸ்களில் பெண்களின் கூட்டம் அதிகம் காணப்பட்டது. ஆனாலும் கிராமப்புற பஸ்களில் எதிர்பார்த்த அளவிற்கு நேற்று கூட்டமில்லை.
அகற்றம் 
விருதுநகர் பழைய பஸ் நிலையத்தில் செயல்பட்டு வந்த காய்கறி மார்க்கெட் பஸ் போக்குவரத்து தொடங்கியதால் அங்கிருந்து அகற்றப்பட்டது. இவர்களுக்கு மாற்று இடம் வழங்க நகராட்சி நிர்வாகம் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
பஸ் போக்குவரத்து தொடங்கியதால் நெடுந்தூர ெரயில்களில் வரும் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து காணப்பட்டது. கொரோனா பரவலை தடுக்க அரசின் வழிகாட்டுதலை அனைத்து துறையினரும் பின்பற்ற வேண்டும். இதனை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
மொத்தத்தில் நேற்று பஸ் போக்குவரத்து தொடங்கியதால் மாவட்டம் முழுவதும் இயல்புநிலை திரும்பியது. கடைவீதிகள் பரபரப்பாக காணப்பட்டது.

மேலும் செய்திகள்