வந்தவாசி அருகே; மயானத்துக்கு பாதை கேட்டு கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
வந்தவாசி அருகே மயானத்துக்கு பிணத்தைக் கொண்டு செல்ல பாதை வசதி கேட்டு கிராம மக்கள் தாலுகா அலுவலகம் முன்பு திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வந்தவாசி
வந்தவாசி அருகே மயானத்துக்கு பிணத்தைக் கொண்டு செல்ல பாதை வசதி கேட்டு கிராம மக்கள் தாலுகா அலுவலகம் முன்பு திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், தாசில்தாரிடம் மனு கொடுத்தனர்.
மயான பாதை ஆக்கிரமிப்பு
வந்தவாசியை அடுத்த வங்காரம் கிராம காலனியில் 1500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். பல ஆண்டுகளுக்கும் மேலாக முதல் தெருவில் இருந்து 2-வது தெருவுக்கு போகும் வழியில் புறம்போக்கு நிலம் இருந்தது. இறந்தவர்களின் உடலை அந்த வழியாக எடுத்துச் செல்வது வழக்கம்.
பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஊருக்கு வந்த சலவைத் தொழிலாளி ஒருவருக்கு அந்தப் புறம்போக்கு நிலத்தின் ஒரு பகுதியில் வீடு கட்டிக் கொள்ள இடம் ஒதுக்கி, மீதி பாதையை மயான பாதையாக அனுபவித்து வந்தனர்.
தற்போது இந்தப் பாதையை ஒருவர் ஆக்கிரமித்து காலியாக இருந்த மயான பாதையையும் சேர்த்து பட்டா தயார் செய்து அந்த ஆக்கிரமிப்பு நபர் வேறு ஒருவருக்கு விற்று விட்டார்.
ஆர்ப்பாட்டம்
மயான பாதையை சேர்த்து அந்த நபர் விற்று விட்டதால், இறந்தவர்களின் உடல்களை எடுத்துச் செல்வதில் பிரச்சினை எழுந்தது. திருவிழா காலங்களில் அந்த வழியாக அம்மன் வீதி உலா வருவது வழக்கம்.
ஆக்கிரமிப்பால் வீதிஉலா நடப்பது தடைப்பட்டுள்ளது. இது குறித்து தாசில்தாரிடம் 31.12.2020 அன்று மனு கொடுக்கப்பட்டது.
இந்தநிலையில் மீண்டும் அந்த மயான பாதையை, தான் பட்டா செய்து விட்டதாக கூறி, அவர் சுற்றுச்சுவர் அமைக்கும் பணியில் ஈடுபடுகிறார்.
இதனால் வங்காரம் கிராம மக்கள் பலர் திரண்டு வந்து மயானத்துக்கு பிணத்தைக் கொண்டு செல்ல பாதை வசதி கேட்டும், ஆக்கிரமிப்பு பாதையை மீட்டுத்தர கோரியும் தாலுகா அலுவலகம் முன்பு திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தாசில்தார் முற்றுகை
பின்னர் தாசில்தாரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், தாசில்தார் திருநாவுக்கரசுவிடம் மனு அளித்தனர். மனு மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் கிராம மக்கள் பலரை திரட்டி பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபடுவோம், என அவர்கள் கூறினர்.