மாவட்டத்தில் இருந்து வெளியூர்களுக்கு பஸ்கள் இயக்கம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கு தளர்விற்கு பின்னர் நேற்று முதல் வெளியூர்களுக்கு பஸ் போக்குவரத்து தொடங்கியது
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கு தளர்விற்கு பின்னர் நேற்று முதல் வெளியூர்களுக்கு பஸ் போக்குவரத்து தொடங்கியது.
பஸ் போக்குவரத்து
கொரோனா பரவல் காரணமாக தளர்வுகளற்ற ஊரடங்கும் பின்னர் தளர்வுகளுடன் ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கின்போது பொது போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் பொது போக்குவரத்தை மீண்டும் தொடங்க அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்று குறைவாக உள்ள மாவட்டங்களில் மட்டும் பஸ் போக்குவரத்து நேற்று முதல் தொடங்கப்பட்டது.
இதன்படி கும்பகோணம் கோட்டத்தின் கீழ் உள்ள காரைக்குடி மண்டலத்திற்கு உட்பட்ட ராமநாதபுரம், பரமக்குடி, ராமேசுவரம், கமுதி, சாயல்குடி ஆகிய அரசு போக்குவரத்து கழக பணி மனைகளில் இருந்து நேற்று காலை முதல் பஸ் போக்குவரத்து தொடங்கியது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 112 நகர் பேருந்துகள், 163 புறநகர் பேருந்துகள் என மொத்தம் 275 பஸ்கள் நேற்று வழக்கம்போல இயக்கப்பட்டன.
முகக்கவசம் கட்டாயம்
கொரோனா பரவல் குறையாத பகுதிகளான கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு, சிதம்பரம், தஞ்சை, கும்பகோணம், நாகை, கரூர், வேளாங்கன்னி, பட்டுக்கோட்டை ஆகிய பகுதிகள் தவிர மற்ற பகுதிகளுக்கு வழக்கம்போல பஸ்கள் இயக்கப்பட்டன. இதேபோல மாவட்டத்திற்குள் இயக்கப்படும் நகர பேருந்துகள் வழக்கம்போல அனைத்து வழித்தடங்களிலும் இயக்கப்பட்டன.
பஸ்களில் பயணிகள் ஏறும்போது முக கவசம் அணிவதை உறுதி செய்த பின்னர் தான் கண்டக்டர்கள் பஸ்களில் ஏற்றினர். நீண்ட நாட்களுக்கு பிறகும், கொரோனா தொற்று வெகுவாக குறைந்துள்ள நிலையிலும் பஸ்கள் இயக்கப்பட்டதால் இதுநாள்வரை மேற்கொள்ளாத பணிகளுக்காக பொதுமக்கள் ஆர்வமுடன் பஸ்களில் பயணம் செய்தனர். கிராமங்களில் இருந்து அத்தியாவசிய தேவைகளுக்காக பஸ்களில் பயணம் செய்ய வேண்டியவர்கள் நேற்று தங்களின் பணிகளை மேற்கொள்ளும் வகையில் பயணம் செய்ததை காண முடிந்தது. கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் பஸ் போக்குவரத்து தொடங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை தொடங்கியது.