பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ராமேசுவரத்தில் பெட்ரோல்,டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது;
ராமேசுவரம்
ராமேசுவரத்தில் பெட்ரோல்,டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், விலை உயர்வை உடனடியாக குறைக்க வலியுறுத்தியும் நேற்று ராமேசுவரம் தபால் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது பெட்ரோல் மற்றும் டீசல் என்று எழுதப்பட்ட இரண்டு கேன்களுக்கு மாலை அணிவித்தும், பால் ஊற்றியும் வாய்க்கரிசி போட்டு ஈம காரியம் செய்வது போன்று நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகா துணைச் செயலாளர் வடகொரியா தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் தாலுகா செயலாளர் முருகானந்தம், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் செந்தில்வேல், தாலுகா குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரத்தில் இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றின் சார்பில் மத்திய அரசை கண்டித்தும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராமநாதபுரம் அரண்மனை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் முருகபூபதி தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தாலுகா செயலாளர் செல்வராஜ், விடுதலைசிறுத்தை கட்சியின் மண்டல பொறுப்பாளர் முகம்மது யாசின் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்விற்கு வழிவகுக்கும் பெட்ரோல்-டீசல் விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும் என்று கோஷமிட்டனர்.
பரமக்குடி பஸ் நிலையம் முன்பு விடுதலைசிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. விடுதலைசிறுத்தைகள் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் வேந்தை சிவா தலைமை தாங்கினார். இதில் பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. விடுதலைச்சிறுத்தைகள் கட்சி மாவட்ட துணை செயலாளர் பிரபாகர் மற்றும் ராஜன், காசிநாத துரை, செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.