பட்டா மாற்றம் செய்ய ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது
பட்டா மாற்றம் செய்ய ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது
பாலக்கோடு:
பட்டா மாற்றம் செய்ய ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை தர்மபுரி லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
பட்டா மாற்றம்
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகேயுள்ள திம்மம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் மூர்த்தி (வயது 24). இவர் அந்த பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 3½ சென்ட் நிலம் வாங்கியுள்ளார். இந்த நிலத்தை பட்டா மாற்றம் செய்ய வேண்டி ஜெர்தலாவ் கிராம நிர்வாக அலுவலரிடம் அவர் விண்ணப்பித்து இருந்தார். ஜெர்தலாவ் கிராம நிர்வாக அலுவலர் இல்லாததால் பி.செட்டிஅள்ளி கிராம நிர்வாக அலுவலர் (பொறுப்பு) செல்வம் (53) கூடுதலாக கவனித்து வந்தார். மூர்த்தி பட்டா மாற்றம் குறித்து கிராம நிர்வாக அலுவலர் செல்வத்திடம் கேட்டுள்ளார். அப்போது ரூ.3000 லஞ்சம் கொடுத்தால், பட்டா மாற்றம் செய்து தருவதாக அவர் கூறியுள்ளார்.
கிராம நிர்வாக அலுவலர் கைது
அவ்வளவு பணம் கொடுக்க முடியாது என்று கூறியதால் ரூ.2,500 கொடுக்குமாறு அவர் கேட்டுள்ளார். இதனால் முதல் கட்டமாக ரூ.500-ஐ மூர்த்தி கொடுத்துள்ளார். பின்னர் லஞ்சம் கொடுக்க விரும்பாத மூர்த்தி இதுகுறித்து தர்மபுரி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார்.
இதையடுத்து தர்மபுரி லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜன், இன்ஸ்பெக்டர் பழனிசாமி ஆகியோர் ரசாயன பவுடர் தடவிய ரூ.2 ஆயிரத்தை மூர்த்தியிடம் கொடுத்து அனுப்பினர். அந்த பணத்தை கிராம நிர்வாக அலுவலர் செல்வத்திடம் கொடுத்த போது அங்கு மறைந்திருந்த போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.