பொள்ளாச்சி உள்பட 4 ஒன்றியங்களில் 4 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

பொள்ளாச்சி உள்பட 4 ஒன்றியங்களில் நடந்த சிறப்பு முகாம்களில் 4 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

Update: 2021-06-28 18:11 GMT
பொள்ளாச்சி

பொள்ளாச்சி உள்பட 4 ஒன்றியங்களில் நடந்த சிறப்பு முகாம்களில் 4 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

சிறப்பு முகாம்

கொரோனா தடுப்பூசி குறித்து பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வு ஏற்பட்டு உள்ளது. ஆனால் அனைவருக்கும் செலுத்தும் வகையில் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்வதில்லை. அரசு ஆஸ்பத்திரிகளில் நிறுத்தப்பட்ட பிறகு, நகர்புற மற்றும் கிராமப்புறங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. 

இந்த நிலையில் பொதுமக்களின் சிரமங்களை போக்கும் வகையில் பேரூராட்சிகளை தொடர்ந்து, ஊராட்சி பகுதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது.

அதன்படி வடக்கு, தெற்கு, கிணத்துக்கடவு, ஆனைமலை, சுல்தான்பேட்டை ஒன்றியங்களில் தலா 2 ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு, நேற்று சிறப்பு முகாம் நடைபெற்றது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று தடுப்பூசி போட்டுக் கொண்டனர். 

மற்ற பகுதிகளை சேர்ந்த பொதுமக்களும் முகாமிற்கு வந்ததால் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதற்கிடையில் தட்டுப்பாடு காரணமாக தடுப்பூசி கடைக்காமல் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்து ஏமாற்றத்துடன் சென்றனர். பொள்ளாச்சி உள்பட 4 ஒன்றியங்களில் நேற்று 4 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

கூடுதல் தடுப்பூசி

தடுப்பூசி முகாம்கள் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் பொதுமக்களுக்கு முன்கூட்டியே தெரிவிப்பதில்லை. இதனால் ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று தடுப்பூசி போடுகிறார்களா? என்று பார்க்க வேண்டிய உள்ளது. மேலும் தட்டுப்பாடு மற்றும் சிலரை முன்னுரிமை அடிப்படையில் முகாமில் அனுமதிப்பதால், அதிகாலை முதலே வரிசையில் காத்திருக்கும் நபர்களுக்கு தடுப்பூசி கிடைப்பதில்லை.

ஊராட்சிகளில் நடந்த முகாம்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவில்லை. தற்போது கொரோனா தொற்று கிராமங்களில் தான் சற்று குறையாமல் உள்ளது. எனவே கூட்ட நெரிசலை தவிர்க்க அந்தந்த ஊராட்சிகளில் நடக்கும் சிறப்பு முகாம் குறித்து பொதுமக்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும்.

 மேலும் ஊராட்சி பகுதி மக்களுக்கு டோக்கன் வழங்க வேண்டும். டோக்கன் வைத்திருக்கும் நபர்களுக்கு மட்டும் தடுப்பூசி போடுவதன் மூலம் பொதுமக்கள் தேவையில்லாமல் வரிசையில் காத்திருப்பது தவிர்க்கப்படும். ஆனால் அதிகாரிகள் தடுப்பூசி தீர்ந்து போகும் வரை பொதுமக்களை வரிசையில் நிறுத்துகின்றனர். 

இதனால் பிரச்சினைகள் மற்றும் தேவையில்லாத வாக்குவாதம் ஏற்படுகிறது. எனவே அதிகாரிகள் சரியாக திட்டமிட்டு முகாம்களை நடத்தவும், கூடுதலாக தடுப்பூசி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்