மாணவ மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் வினியோகம்

2021- 22-ம் ஆண்டுக்கான பாடப்புத்தகங்களை மாணவ- மாணவிகளுக்கு வழங்கும் பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

Update: 2021-06-28 17:52 GMT
கோவை

2021- 22-ம் ஆண்டுக்கான பாடப்புத்தகங்களை மாணவ- மாணவிகளுக்கு வழங்கும் பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

பாடப்புத்தகங்கள் வினியோகம் 

கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டன. இதில் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக கல்வி தொலைக்காட்சி, ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

 தற்போது ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் பள்ளிக்கூடங்களில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. 

இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2021-22-ம் கல்வி ஆண்டிற்கான பாடப் புத்தகங்களை மாணவர்களுக்கு வினியோகம் செய்யும் பணி தொடங்கி உள்ளது. 

கலெக்டர் வழங்கினார் 

கோவையில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் ராஜவீதி அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 8, 10 மற்றும் பிளஸ்-2 வகுப்பு மாணவிகளுக்கு பாடப்புத்தகங்களை கலெக்டர் சமீரன் வழங்கி, தொடங்கி வைத்தார்.  

மேலும் பாடப்புத்தகங்களை பெற்றுக்கொண்ட  மாணவிகள் நன்றாக படித்து அதிக மதிப்பெண் பெறவும், தங்கள் உயர் கல்வியை சிறப்பாக மேற்கொண்டு நல்ல அறிவாற்றல் பெறவும் கலெக்டர் வாழ்த்து தெரிவித்தார்.

2¼ லட்சம் மாணவர்கள் 

கோவை மாவட்டத்தில் உள்ள 872 தொடக்கப்பள்ளிகளில் 55 ஆயிரத்து 913 மாணவ-மாணவிகள், 255 நடுநிலைப்பள்ளிகளில் 36 ஆயிரத்து 930 பேர், 105 உயர்நிலைப்பள்ளிகளில் 23 ஆயிரத்து 323 பேர், 154 மேல்நிலைப்பள்ளிகளில் 1 லட்சத்து 20 ஆயிரத்து 172 பேர் என மொத்தம் 2 லட்சத்து 35 ஆயிரத்து 618 பேருக்கு பாட புத்தகங்கள் வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்