சிதம்பரத்தில் பரபரப்பு 8 ஆட்டோ, காரை அடித்து நொறுக்கிய கும்பல் 11 வாலிபர்கள் கைது; மேலும் 4 பேருக்கு வலைவீச்சு

சிதம்பரத்தில் 8 ஆட்டோக்கள், காரை அடித்து நொறுக்கிய 11 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.;

Update: 2021-06-28 17:36 GMT
சிதம்பரம், 


சிதம்பரம் தில்லை காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாஸ்கரன். இவரது மனைவி தையல் நாயகி.  இவர் தில்லை காளியம்மன் கோவில் அருகே தள்ளுவண்டியில் தேங்காய், பழம், வியாபாரம் செய்து வருகிறார். தையல்நாயகி அந்த பகுதியில் பாதையை மறித்து வியாபாரம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் அதே பகுதியில் உள்ள ஆட்டோ டிரைவர் குறிஞ்சி தேவர் மகன் முனியாண்டி (36) மற்றும் சில ஆட்டோ டிரைவர்கள் சேர்ந்து, தையல்நாயகியிடம் ஏன் இதுபோன்று பொதுவழியை மறித்து வியாபாரம் செய்து வருகிறீர்கள் என்று கேட்டுள்ளனர். இதில் அவர்களுக்கு  இடையே வாய்தகராறு ஏற்பட்டடது.

ஆட்டோக்களை அடித்து நொறுக்கினர்

நேற்று முன்தினம் இரவு, தையல்நாயகி தனது மகன்களான அன்பரசன் (25), பாலசுந்தர் (23), தினேஷ்( 19), இவர்களது நண்பர்களான குமார் மகன் சூர்யா (18),  எம்.எம். நாடார் தெருவை சேர்ந்த குணசேகர் மகன் கோபாலகிருஷ்ணன் (22), குஞ்சிதமூர்த்தி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த ராஜசேகர் மகன் விமல் (22), அம்பேத்கர் நகர் சுந்தரமூர்த்தி மகன் முருகநாதன் (22),

 ராதாநல்லூர் பகுதி ராமமூர்த்தி மகன் கருணாமூர்த்தி (24), வேங்கன் தெரு  முருகன் மகன் சதீஷ்குமார் (21), மற்றும் கலியா, பிரபு, சிவராஜ், சிவா  மற்றும்  16 வயது சிறுவன்  ஆகியோர் சேர்ந்து, தில்லை காளியம்மன் கோவில் அருகே உள்ள ஆட்டோ நிறுத்தத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த  முனியாண்டி ஆட்டோ உள்பட 8 ஆட்டோக்களை இரும்பு பைப்பால் அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். மேலும் ஒரு கார், மோட்டார் சைக்கிள், 3 பூக்கடைகளை அடித்து நொறுக்கினர்.


11 பேர் கைது

இதுபற்றிய தகவல் அறிந்த சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் ராஜ் மற்றும் சிதம்பரம் நகர போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.  

இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அன்பரசன், பாலசுந்தர், தினேஷ், சூர்யா, கோபாலகிருஷ்ணன், விமல், முருகநாதன், கருணாமூர்த்தி, சதீஷ்குமார், பிரபு (25) மற்றும் 16 வயது சிறுவனை கைது செய்தனர்.  

மேலும் தையல்நாயகி, கலியா, சிவராஜ், சிவா ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்