1½ மாதங்களுக்கு பிறகு அரசு பஸ்கள் இயக்கம் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மக்கள் பயணித்தனர்

கடலூர் மாவட்டத்தில் 1½ மாதங்களுக்கு பிறகு நேற்று அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. இதில் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மக்கள் பயணித்தனர்.;

Update: 2021-06-28 17:30 GMT
கடலூர், 

கொரோனா வைரஸ் 2-வது அலை பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் கடந்த மே மாதம் 10-ந் தேதி முதல் தளர்வில்லா முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இந்த உத்தரவால் பொது போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. 

இதையடுத்து கடந்த மாதத்தில் தொடர்ந்து 2 வாரங்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், நோய் தொற்று பரவல் குறையத்தொடங்கியது.


அதை தொடர்ந்து கடந்த மாதம் 24-ந் தேதி முதல் ஒவ்வொரு வாரமும் ஊரடங்கில் சில தளர்வுகளை அரசு அறிவித்தது. இந்நிலையில் 6-வது முறையாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கானது 28-ந் தேதி (அதாவது நேற்று) காலை 6 மணியுடன் முடிவடைந்தது. 

இதனால் 25-ந் தேதி 7-வது முறையாக ஊரடங்கை 28-ந் தேதி முதல் 5-ந்தேதி வரை நீட்டித்து, பல்வேறு தளர்வுகளையும் அரசு அறிவித்தது. இந்த தளர்வில் அந்தந்த மாவட்டத்திற்குள்ளேயே பொது போக்குவரத்துக்கு, அரசு அனுமதி அளித்தது. அதனால் கடந்த 1½ மாதங்களாக பணிமனைகளிலேயே நிறுத்தப்பட்டிருந்த அரசு பஸ்கள் அனைத்தும் பழுதுநீக்கி, துப்புரவு செய்யும் பணிகள் தீவிரமாக நடந்தது.

கிருமிநாசினி தெளிப்பு

இதையொட்டி அரசின் பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கடலூர் மாவட்டத்தில் நேற்று காலை 6 மணி முதல் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. முன்னதாக கடலூர் பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்ட பஸ்கள் மீது கிருமிநாசினி தெளித்து, சுத்தப்படுத்தப்பட்டது.


 வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றும் வகையில், பயணிகளுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டது. பின்னர் முக கவசம் அணிந்து வந்த பயணிகள் மட்டுமே பஸ்சில் ஏறி பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். 


கடலூர் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், சென்னை, திருச்சி, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அண்டை மாநிலமான புதுச்சேரி மாநிலத்திற்கு, கடலூரில் இருந்து நேற்று அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை.

புதுச்சேரிக்கு இயக்கப்படவில்லை

தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே தான் பஸ்கள் இயக்கப்பட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளதால், தமிழகத்தில் இருந்து புதுச்சேரி மாநிலத்திற்கு அரசு பஸ்களை இயக்க அனுமதி வழங்கப்படவில்லை. 


மேலும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பெரும்பாலான பொதுமக்கள் பயணங்களை தவிர்த்து வருவதால், பஸ்களில் ஒருசிலர் மட்டுமே பயணித்ததை காண முடிந்தது. இதனால் பஸ்நிலையங்களும் வெறிச்சோடியே காணப்பட்டது.


250 பஸ்கள் இயக்கம்

இதுகுறித்து அரசு போக்குவரத்துக்கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், கடலூர் மாவட்டத்தில் நேற்று மாவட்டத்திற்குள் 250 பஸ்கள் இயக்கப்பட்டுள்ளன. மேலும் சேலம், சென்னை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பயணிகள் வருகைக்கு ஏற்ப 250 பஸ்கள் இயக்கப்பட்டன.


கும்பகோணம் செல்லும் பஸ்கள் வடகரை பேருந்து நிறுத்தம் வரையும், சேலம் செல்லும் பஸ்கள் நத்தகரை வரையும் மட்டுமே இயக்கப்பட்டன. மேலும் அனைத்து பஸ்களிலும் 50 சதவீத பயணிகள் மட்டுமே பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டது என்றார்.

மேலும் செய்திகள்