ஆன்லைன் வகுப்பால் மனச்சோர்வு: தலைமுடியை விழுங்கிய விழுப்புரம் மாணவி
வயிற்றில் இருந்து 1 கிலோ கட்டி அகற்றம்
விழுப்புரம்,
விழுப்புரம் நகரில் வசிக்கும் 15 வயதுடைய எஸ்.எஸ்.எல்.சி. மாணவி ஒருவர், கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக ஆன்லைன் வகுப்பு மூலம் கல்வி கற்று வந்துள்ளார். அவரது பெற்றோர் இருவரும் பணிக்கு சென்றுவிடுவதால் அந்த மாணவி, தனது பாட்டியுடன் வீட்டில் இருந்து வந்தார். இந்த சூழலில் அந்த மாணவிக்கு திடீரென வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. உடனே அந்த மாணவியை அவரது பெற்றோர், விழுப்புரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அங்கு மாணவியை பரிசோதனை செய்ததில் அவரது வயிற்றில் கட்டி இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து டாக்டர் ராஜமகேந்திரன் தலைமையிலான மருத்துவ குழுவினர் கடந்த வாரம், அந்த மாணவிக்கு அறுவை சிகிச்சை செய்து அவரது வயிற்றிலிருந்து சுமார் ஒரு கிலோ எடையுள்ள முடிகளால் ஆன கட்டியை அகற்றியுள்ளனர்.
இதுகுறித்து குடல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ராஜமகேந்திரன் கூறியதாவது:- எங்கள் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட மாணவிக்கு ஸ்கேன் எடுத்து பார்த்தபோது வயிற்றில் முடிகளால் ஆன கட்டி இருப்பதை உறுதி செய்தோம். ஆன்லைன் வகுப்பால் அந்த மாணவிக்கு மனச்சோர்வு ஏற்பட்டு தன் தலையில் உள்ள முடிகளை பிய்த்து விழுங்கியுள்ளார். இதனால் முடிகளால் ஆன கட்டி ஏற்பட்டுள்ளது. சிறுகுடல் வரை பரவியிருந்த இக்கட்டியை உடனடியாக அறுவை சிகிச்சை மூலம் அகற்றினோம். இவ்வாறு அவர் கூறினார்.