மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி 3 வாலிபர்கள் படுகாயம்
மேலூர் 4 வழிச்சாலையில் மோட்டார்சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலூர்,ஜூன்.
மேலூர் 4 வழிச்சாலையில் மோட்டார்சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வாலிபர்கள்
மேலூர் அருகில் உள்ள தும்பைப்பட்டியைச் சேர்ந்தவர்கள் அய்யனார் (வயது 25), வினோத்குமார் (24) மற்றும் ஆனந்தன் (25).
இவர்கள் 3 பேரும் ஒரே மோட்டார்சைக்கிளில் மேலூருக்கு வந்தனர். 4 வழிச்சாலையில் இருந்து மேலூருக்குள் மோட்டார் சைக்கிள் திரும்பியபோது எதிரே சென்னை நோக்கி சென்ற கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
மோதிய வேகத்தில் மோட்டார்சைக்கிளில் வந்த 3 பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர். மோட்டார்சைக்கிளை கார் நீண்ட தூரம் இழுத்து சென்றது. காரின் அடியில் சிக்கியபடி ஒருவர் கிடந்தார்.
காருக்கு அடியில் சிக்கிய வாலிபர்
அங்கு வாகனங்களில் வந்தவர்கள் ஒன்று சேர்ந்து காரை கைகளினால் தூக்கி அந்த நபரை வெளியே மீட்டனர். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ் மற்றும் போலீசார் வந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 3 பேரையும் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அவர்கள் 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து மேலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.