பிளஸ்-1 மாணவர் சேர்க்கை தொடங்கியது

நீலகிரி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பிளஸ்-1 மாணவர் சேர்க்கை தொடங்கியது.

Update: 2021-06-28 14:49 GMT
ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பிளஸ்-1 மாணவர் சேர்க்கை தொடங்கியது.

அனைவரும் தேர்ச்சி

தமிழகத்தில் கடந்த கல்வியாண்டில் பொதுத்தேர்வையொட்டி பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடத்தப்பட்டது. பின்னர் கொரோனா பரவல் காரணமாக பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

மேலும் ஊரடங்கால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகள் மூடப்பட்டு இருந்தன. இதற்கிடையே தற்போது ஊரடங்கு தளர்வில் பள்ளி, கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை தொடர்பான பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

பிளஸ்-1 மாணவர் சேர்க்கை

இதைத்தொடர்ந்து நீலகிரியில் கூடலூர், குன்னூர் கல்வி மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் பணிக்கு வந்தனர். எஸ்.எஸ்.எல்.சி. முடித்த மாணவர்கள், பிளஸ்-1 சேர்க்கைக்கு அவர்களது பொதுத்தேர்வு மதிப்பெண் அவசியம். தற்போது அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டதால், அதற்கு மாற்றாக 9-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பிளஸ்-1 மாணவர் சேர்க்கை நடத்தலாம் என்று உத்தரவிடப்பட்டது.

ஊட்டி, அணிக்கொரை, தூனேரி, நஞ்சநாடு உள்ளிட்ட அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பிளஸ்-1 மாணவர் சேர்க்கைக்காக விண்ணப்பங்கள் வழங்கப்பட்டது. இதனை பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் நேரில் வந்து வாங்கி சென்றனர். அவர்களது விவரங்கள் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டது.

பாடப்புத்தகங்கள்

மேலும் தங்களுக்கு விருப்பமான பாடப்பிரிவுகளை தேர்ந்தெடுத்து, விண்ணப்பங்களை பூர்த்தி செய்து பள்ளிகளில் வழங்கி வருகின்றனர். கொரோனா பரவலால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நாசருதீன் கூறியதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பிளஸ்-1 மாணவர் சேர்க்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆங்கிலம், தமிழ் வழியில் பாடப்பிரிவு வாரியாக மாணவர் சேர்க்கை நடக்கிறது. அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளில் அரசு தெரிவித்த வழிகாட்டு நெறிமுறைகளை மாணவர்கள் பின்பற்ற வேண்டும். மேலும் இந்த கல்வியாண்டுக்கான பாடப்புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்